பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கோப ருபியாய்...

77


தூரத்தில் தெரிந்த இரண்டு சிவப்புத் தொப்பிகளைப் பார்த்ததும், கோட்டுக்கு வெளியே நின்ற கூட்டத்தில் ஒரு பகுதி நழுவி, இன்னொரு பக்கம் தங்களால் பார்க்கக்கூடிய அதே சமயம் பிறரால் பார்க்க முடியாத இடத்தில் போய் நின்று கொண்டது. வெள்ளைச்சாமி, ஓடுவதற்குத் தயாராய் இருந்தான். ஏற்கனவே போலீஸில் அடிபட்டவன். பீடி ஏஜெண்ட் ராமசாமி அங்கே தெரிந்த போலீஸ்காரர்களுக்கு இப்பவே, இங்கேயே மரியாதை காட்டுவதுபோல் மடித்துக் கட்டிய வேட்டியை எடுத்துக் கரண்டைக் கால்வரைக்கும் இழுத்துப் போட்டான். மாரிமுத்து நாடார் அவசர அவசரமாக கோட்டை அழித்துவிட்டார். அவருக்கும் எங்கேயாவது போய்விட வேண்டும் போலிருந்தது. இவ்வளவு நேரமும் வீறாப்பாய் நின்னுட்டு இனிமே போனால் எப்டி’

“என்னய்யா ஒங்க ஊர்ல பெரிய இழவாப் போச்சி” என்று சொல்லிக் கொண்டே, ஹெட்கான்ஸ்டபிள், கான்ஸ்டபிளுடன் அங்கே வந்தபோது துடித்துக்கொண்டிருந்த மாயாண்டி, அவர்களை ஏறிட்டுப் பார்த்து எழுந்தார். அவரால் நிற்க முடியவில்லை. மீண்டும் அந்தக் கட்டாந்தரையில் உட்கார்ந்தார்.

உலகம்மை, அய்யாவை ஆதரவாகப் பிடித்துக் கொண்டே “இவருதான் மாரிமுத்து. இவருதான் ராமசாமி. இவன்தான் வெள்ளைச்சாமி. இவங்க மூணுபேருமாத்தான் எங்கய்யாவை இழுத்துக் கோட்டுக்குள்ள நிறுத்தினவங்க” என்றாள்.

ஹெட்கான்ஸ்டபிள், மாரிமுத்து நாடாரை ஏறிட்டுப் பார்த்தார். பிறகு, “அடடே நாடாரா? நீங்களா இப்டிப் பண்ணுனது?” என்றார்.

மாரிமுத்து நாடார் சிரிப்பை வரவழைத்துக் கொண்டார்.

“நான் ஒண்னும் பண்ணலிங்க. குடுத்த கடன கேட்டேன். அதுக்கு இந்த மனுஷன் இங்க வந்து புரள்றான். குடி வெறில அவனே புரண்டா நான் என்னங்க பண்றது. ஏய் பிராந்தா. அய்யாமாருக்கு ரெண்டு காளிமார்க் கலர் வாங்கியாடா. ராமசாமி ரெண்டு நாற்காலி கொண்டு வா! வேற எதும் வேணுங்களா?”

“ஒண்ணும் வேண்டாம். நாங்க சீக்கிரமா போவணும்.”

உலகம்மை சோற்றுக்குள் மறைத்து வைத்த முழுப்பூசணிக்காயை வெளியே எடுக்கத் துடித்தாள். ஹெட்கான்ஸ்டபிளோ சாவகாசமாக வயிற்றை நெளித்து விட்டுக்கொண்டு நின்றார்.