பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78

ஒரு கோட்டுக்கு வெளியே ...



"பொய் சொல்லுறாரு. மத்தியானத்தில் இருந்து இவர இங்கயே நிறுத்தி வச்ச பாவி மனுஷன், இப்ப என்னமாப் பேசுறாரு? வேணுமுன்னா இங்க நிக்கவங்களக் கேட்டுப் பாருங்க."

ஹெட்கான்ஸ்டபிள் சுற்றி நின்றவர்களைக் கேட்பதற்காக வாயெடுத்தார். இதற்குள் காளிமார்க் கலரை பிராந்தனிடமிருந்து வலுக்கட்டாயமாக வாங்கி, மாரிமுத்து நாடார் நீட்டினார். இந்தச் சிறு இடைவெளி நேரத்தில், 'நமக்கென்ன வம்பு' என்று நினைத்து கூட்டத்தில் பெரும் பகுதி கலைந்து விட்டது.

"கலர் நல்லா இருக்கே" என்று சொல்லிக் கொண்டே "ஏய்யா ஒங்களத்தான். இவர நாடாரு கோட்டுக்குள்ள நிறுத்தி வச்சாரா? சொல்லுங்க உம் ஜல்தி" என்றார் ஹெட்.

கூட்டத்தில் யாருமே பேசவில்லை.

"அட சொல்லுங்கய்யா. நாடார் பொய் சொல்லுறாரா? இந்தப் பொண்ணு பொய் சொல்றாளா?"

கூட்டம் மௌனம் சாதித்தது. பிறகு ஒருவர் ஒரு சலாம் போட்டுக் கொண்டே, பொதுப்படையாகப் பேசினார்.

"எங்களுக்கு ஒண்ணுந் தெரியாதுங்க. வயலுக்குப் போயிட்டு ஆப்போதான் வந்தோம்."

இதற்குள் ராமசாமி கொண்டு வந்த நாற்காலிகளில், இரு போலீஸ்காரர்களும் உட்கார்ந்தார்கள்.

உலகம்மைக்கு ஒன்றும் ஓடவில்லை . 'இது ஊரா அல்லது காடா?' என்று தனக்குள்ளே கேட்டுக் கொண்டாள். "எலியும் பூனையும் மாதிரி சண்டை போடுறாக" என்ற பழமொழிகயை ஊரார் சொல்லும் போதெல்லாம், அவள் யோசித்துப் பார்த்தவள், 'எலி, பூனைகூட எப்பவும் சண்டைக்குப் போகாது. உயிர் பிழைச்சா போதுமுன்னு பூனயப் பார்த்ததும் ஓடுகிற ஜீவன் அது. இருந்தாலும் அடிச்சிக் கொல்லுற பூனயயும், துடிச்சிச் சாவுற எலியையும் ‘ஒரே தட்ல' வச்சு 'எலியும் பூனயும் மாதிரி' என்று சொல்வதன் உட்பொருள், இப்போதுதான் அவளுக்குப் புரிய வேண்டாத அளவுக்குப் புரிந்தது. போலீஸ்காரங்க என்னடான்னா கலர் குடிக்காங்க!' ஊராரைப் பார்த்தே அவள் கேட்டாள்.