பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கோப ருபியாய்...

79


“சொல்லுங்கய்யா துரைச்சாமி மாமா நீரும் பாத்துக்கிட்டுத்தானே இருந்திரு சொல்லுமே. மே முத்துமாமா! நீருதான என்ன மாரிமுத்து நாடாரோட காலு கைய பிடிக்கச் சொன்னீரு நான் கோட்டுக்குள்ள போனதுக்குப் பிராந்தன் என்னமா கேட்டான்? சொல்லுமேன் சின்னையா, பேச மாட்டிரா மச்சான் மவராசா ஒம்மத்தான். நீருதானே அய்யாக்குத் தண்ணி குடுக்கக் கிணத்துப்பக்கம் போனிரு போலீஸ் அய்யாமாருக்கிட்டச் சொல்லுமே. யாருமே சொல்ல மாட்டியளா. ஒங்க வாயி செத்துப்போச்சா லிங்கையா மச்சான், நீரு கூடவா பேசாம இருக்கியரு?”

கூட்டத்தினர் மனச்சாட்சியால் உந்தப்பட்டதுபோல், முன்னுக்கும் பின்னுக்குமாக நடந்தார்கள். உண்மையைச் சொல்லத் துடித்த சிலர்கூட, போலீஸ்காரர்கள் கலரைக் குடித்த தோரணையைப் பார்த்ததும், தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டார்கள். உலகம்மை, இப்போது போலீஸ்காரர்களைப் பார்த்து அழுதுகொண்டே பேசினாள்.

“இந்தா வடக்கப் பாக்குற காளியம்ம சத்தியமாச் சொல்லுறேன். எங்கய்யாவ இந்த ஆளு கோட்டுக்குள்ள நெறுத்துனது வாஸ்தவம். மாரிமுத்து நாடாரே, ஏய்யா பயந்துட்டிரா? இவ்வளவுதான் ஒன் வீரமா? இப்ப கோடு கிழியுமேய்யா. ஆம்புளன்னா உள்ளதச் சொல்லுமேய்யா.”

ஹெட்கான்ஸ்டபிள் அதட்டினார். இதற்குள் இரண்டு இளநீர் அங்கே வந்துவிட்டன.

“ஏய் அனாவசியமா பேசாத பொம்புளைக்கு இவ்வளவு வாயி ஆவாது.”

“நீரும் ஓரம்சாஞ்சிப் பேசுறியருய்யா. இவங்கள ரகசியமாக் கூப்புட்டு விசாரிச்சா உள்ளதச் சொல்லுவாங்க. பப்ளிக்கா கேட்டா பயப்படத்தான் செய்வாங்க. ஏன்னா இந்த ஆளு அவங்கள கருவறுத் திடுவான் னு தெரியும். ஒவ்வொரு ஆளும் ஒவ்வொரு விஷயத்துல அவருகிட்ட மாட்டிக்கிட்டவங்க. ஏட்டய்யா ரகசியமா விசாரியும். என் அய்யாவ படுத்துனபாடு அப்பத் தெரியும்.”

ஹெட்கான்ஸ்டபிள், இளநீரைத் தம்பிடித்துக் குடித்துவிட்டுச் சீறினார். மீசையில் சில இளநீர்த்துளிகள் புல்லில் படர்ந்த பணிபோல் மின்னின.

“ஏ பொண்ணு. எனக்கு முப்பது வருஷ போலீஸ் சர்வீஸ். எப்டி விசாரிக்கணுமுன்னு எனக்கு நீ சொல்லிக் குடுக்கிறியா. பொம்பிளேன்னு பாக்கறேன். இல்லன்னா லத்தி பிஞ்சிருக்கும்.”