பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புதிதல்ல. காரிருளைக் கிழித்து வரும் கதிரவன் ஒளிபோலப் படைப்பாற்றலால் எழுத்தாளர்கள் ஒளிவீசத்தான் செய்கிறார்கள். அவ்வகையில் சமுத்திரம் தடைகள் பல கடந்து இலக்கிய உலகில் அங்கீகாரம் பெற்றுவிட்டார்.

அவர் படைப்புக்களில் அலுவலங்களின் அவலமும், அதிகாரிகளின் ஆணவப்போக்கும் லஞ்ச லாவணியங்களின் சீர்கேடும் மிகுந்த அழுத்தத்துடன் பேசப்படுகின்றன.

தீமைகண்டு பொங்கும் நெஞ்சினர்; சமூகக் கொடுமைகளை ஆவேசமாகச் சாடுகிறவர். அவரது சத்திய ஆவேசம் சுகவாசிகளுக்கு எரிச்சல் ஊட்டுகிறது. சிறுகதை, நாவல், நாடகம் முதலிய இலக்கிய வடிவங்களில் கடந்த 15 ஆண்டுகளில் இருபதுக்கு மேற்பட்ட நூல்களைப் படைத்த அவர் எழுத்தாளர் வரிசையில் குறிப்பிடத்தக்க இடம் பெற்றுவிட்டார். அண்மைக் காலங்களில் அவரைப் போல எழுதவும் அவர் பாணியில் எழுதவும் சிலர் முன்வந்துள்ளனர். கோபாவேசத்தோடு கொதித்தெழும் சமுத்திரத்தின் படைப்புக்களில் பிரச்சார நெடி இருப்பதாகச் சிலர் குறைகூறி மகிழ்கிறார்கள். தாங்கள் விரும்புகிற மொழிநடையில் எழுதவில்லை என்றும் சிலர் குறைபட்டுக் கொள்கிறார்கள். தங்கள் குழுவைச் சேர்ந்த ஒரு சிலரின் படைப்பே சிறந்தது எனத் தலையில் தூக்கிவைத்துக் கொண்டு ஆடுகின்றனர். இலக்கியத்தரம், தரமின்மையைக் காலம் உறுதி செய்யும்.

பத்தாண்டுகளுக்கு முன்பே நவீன விமர்சன உலகத்தின் மும்மணிகளாகிய கைலாசபதி, சிவத்தம்பி, வானமாமலை ஆகியோர் சமுத்திரம் படைப்புக்களின் பன்முக நலன்களைத் திறனாய்ந்து தெளிந்து கூறியுள்ளார்கள். இது சமுத்திரத்தின் கதைக் களங்கள், கதை சொல்லும் முறை, சமுதாயப் பார்வை, படைப்பு வழங்கும் செய்தி என அவரின் படைப்பாளுமை பற்றி மிகத் தெளிவான மதிப்பீடுகள் நாளும் வந்து கொண்டுதான் இருக்கின்றன.