பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கோப ரூபியாய்...

81



புலம்பிக்கொண்டு, இழுத்துச் செல்லப்படும் தாய்ப்பசு பின்னால் கதறியோடும் கன்றுபோல் ஓடினாள்.

மாரிமுத்து நாடார், வெள்ளைச்சாமியும், ராமசாமியும் புடை சூழ ஹெட்கான்ஸ்டபிளிடம் பேசிக்கொண்டே போனார்.

"நாளக்கி மந்திரி வரார். ஜ்யாவுக்கு டூட்டி எங்க?"

"மேடப் பக்கம்."

"அப்படின்னா நாளக்கி அங்க பாக்கலாம்."

"நீங்க வாரியளா?"

"ஆமாம். நானும் பேசுறேன்."

"நீங்க வேற கட்சியாச்சே. மாறிட்டிங்களா?"

"மாறல. ஆனால் மந்திரி எல்லாருக்கும் பொதுத்தானே."

"அதுவுஞ்சரிதான். யோவ் மாயாண்டி, ஜல்தியாய் நடய்யா. ஒன்னோட பெரிய இழவாப் போச்சி."

மாரிமுத்து நாடார், ஹெட்கான்ஸ்டபின் கையை உரசிக்கொண்டே பேசினார். பத்து ரூபாய் நோட்டு ஒன்று கைமாறியது, பாம்புக் கண்ணனான கான்ஸ்டபிளுக்கே தெரியவில்லை.

மாரிமுத்து நாடார் விடைபெற்றுக்கொண்டார். மாயாண்டி தள்ளாடிக்கொண்டே நடந்தார். போலீஸ்காரர்கள் இப்போது அவரைக் கம்புகளால் கூட லேசாகத் தட்டிப் பார்த்தார்கள். "கட்டயில போற வயசுல ஒனக்குப் பட்ட வேணுமா?" என்று சுற்றி நிற்பவர்கள் சிரிக்க வேண்டும் என்பதற்காகத் தமாஷ் செய்தார்கள். உலகம்மை 'அய்யா அய்யா' என்று புலம்பிக்கொண்டே பின்னால் நடந்தாள். ஊர்க்கூட்டமும் அவர்கள் பின்னால் பார்வல அணிவகுப்பு மாதிரி போயிற்று.

உலகம்மை பள்ளிக்கூடத்தின் பக்கம் சிறிது நின்றாள். தள்ளாடிக் கொண்டும், தள்ளப்பட்டுக் கொண்டும் போன தகப்பனைப் பார்த்தாள். அவள் கண்களில் ஒருவித வெறி. உடம்பில் ஒருவித முறுக்கு. தலையில் ஒருவித நிமிர்வு.

முன்னால் போகும் அய்யா, வெறும் அய்யாவாக, இப்போது அவளுக்குத் தெரியவில்லை . ஏழையாகப் பிறந்த ஒருவனை, எந்த வம்புதும்புக்கும் போகாத ஒருவனை, கிட்டத்தட்ட அனாதையாக