பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82

ஒரு கோட்டுக்கு வெளியே ...



இருக்கும் ஒரு அப்பாவியை, அநியாயம் நியாய வேடம் பூண்டு, அக்கிரமம் போலீஸ் உருவமாகி, கொண்டு போவதாக நினைத்துக் கொண்டாள்.

உலகம்மை, வேடிக்கை பார்ப்பது போல் வரும் கூட்டத்தை ஒருமுறை அலட்சியமாகப் பார்த்தாள்.

உபதேசம் செய்த சீமமுத்து மாமா, தண்ணீர் எடுக்கப் போன மவராசா மச்சான், வழக்குப் பேசப் போகும் லிங்கையா மச்சான், வம்புச் சண்டைக்குப் போவக்கூடாது; வந்த சண்டய விடக்கூடாதுன்னு' அடிச்சிப் பேசும் ஆறுமுக ஆசாரி, 'ஏழையென்றும், கோழையென்றும் எவருமில்லை ஜாதியில்" என்று ஒரு பாரதியாக மாறும் சீமைச்சாமி வாத்தியார், அக்கிரமக்காரர்களை அடக்குபவராக 'பாவக்கூத்து' நாடகத்தில் குரலை மாற்றிப் பேசும் சண்முகம் பிள்ளை...

அத்தனை பேரையும் அலட்சியமாகப் பார்த்த உலகம்மைக்கு, இப்போது அசாத்திய தைரியம் வந்துவிட்டது போல் தோன்றியது. அத்தனை பேரும் அவளுக்குப் புழுக்களாகத்தான் தெரிந்தனர். நாடி நரம்புகளெங்கும் வியாபித்திருந்த தைரிய அணுக்கள் அனைத்தும் ஒன்றிரண்டாய், இரண்டு நான்காய், நான்கு பதினாறாய், பதினாறு இருநூற்று ஐம்பத்தாறாய் பிரிந்து. அதுவே அடக்க முடியாத அணுப்பிளப்பாகி அணுகுண்டை அடிவயிற்றில் வைத்திருப்பவள் போல். கூட்டத்தைப் பார்த்துப் பேசினாள்:

"நீங்களெல்லாம் மனுஷங்களாய்யா? ஒங்களுக்கு எதுக்குய்யா வேட்டி, சட்டை? பொட்டையிலயும் கேடுகெட்ட பொட்டப்பயலுக ஏன் பின்னால வாரீக? உள்ளதச் சொல்லப் பயப்படுற நீங்களெல்லாம் எதுக்காவ மனுஷன்னு பூலோகத்துல லாந்தணும்? போங்கய்யா, ஒங்க வேலயப் பாத்துக்கிட்டு."

கூட்டத்தினர் முணுமுணுத்துக் கொண்டே கோபத்துடன் பின்வாங்கினர். ஒருவேளை போலீஸ்காரர்கள் இருந்ததும் நல்லதாய்ப் போயிற்று. இல்லையென்றால், அவளை அடித்தாலும் அடித்திருப்பார்கள். உலகம்மை போலீஸ்காரர்கள் பின்னால் கம்பீரமாக நடந்து கொண்டிருந்தாள்.