பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84

ஒரு கோட்டுக்கு வெளியே ...



கம்பிக்கிராதியில் , சாய்ந்து கொண்டு பரிதாபமாக நின்றார். உலகம்மைக்கு நெஞ்சை அடைத்தது.

  • எதுவும் வேணுமாய்யா?"

"ஒண்ணும் வேண்டாம். நான் சொன்னதை நீ கேட்டுருந்தா இப்டி ஆவாது."

"எல்லாத்துக்கும் கடவுள் இருக்கான். கோட்டுக்குள்ள இருக்கையில தண்ணி தண்ணின்னு தவிச்சீர. நான் பாவி மறந்துபோயி இங்க வந்துட்டேன். தண்ணி குடிச்சீரா? யாரு குடுத்தா?"

"ராமசுப்பு தந்தான். இன்னும் தாகம் தீரல."

ஹெட்கான்ஸ்டபிள் குறுக்கே புகுந்தார்.

"பட்ட போட்டா தாகமாகத்தான் இருக்கும். ஹி ஹி."

"ஒமக்கு எப்படித் தெரியும்?" என்று கேட்கப்போன உலகம்மை, வீரியத்தைவிட காரியம் முக்கியமானது என்பதை உணர்ந்து, பேசாமல் நின்றாள். இதர நான்கு பேரோடு நின்ற மாயாண்டியை, அந்த நால்வரில் ஒருவன், "தாத்தா, இந்தப் பக்கமா வந்து உட்காரும்" என்று ஆதரவோடு சொன்னான், அப்படிச் சொன்னதால் திருப்திப்பட்டாள் உலகம்மை. அதேசமயம் அய்யாவைப் பார்த்துக்கொண்டு நின்றால், முதல்பாடை தனக்குத்தான் என்று நினைத்தவளாய் வெளியே வந்தாள். போலீஸ் காம்பவுண்டுக்குள் ஒரு வேப்ப மரத்தடியில் ஐந்தாறு பெண்கள் உட்கார்ந்திருந்தார்கள். உலகம்மை, அவர்களில் ஒருத்தியானாள்.

"நீ யாரும்மா ?"

"ஊரு குட்டாம்பட்டி. பேரு உலகம்மா. பெரிய பேருதான். அய்யாவ பட்ட போட்டார்னு இழுத்துக்கிட்டு வந்துட்டாங்க. சாராயங்குடிச்சா ஜெயிலுல போடுவாங்களோ?"

"மொதல் தடவயா?"

"பிடிபடுறது மொதல் தடவதான்."

"சப் இன்ஸ்பெக்டர் வருவாரு. காலுல கைல விழ். விட்டுடுவாரு."

"அவரு எப்ப வருவாரு?"

"இன்னிக்கும் நாளைக்கும் மந்திரிகூட இருப்பாரு. நாளக் கழிச்சிதான் கெடைப்பாரு."