பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86

ஒரு கோட்டுக்கு வெளியே ...



சேலையில் முடிச்சி'ப் போட்டு வைத்திருந்தாள். டீக்கடைப் பக்கமாகப் போனாள். பிறகு 'நம்ம நிலம இப்டி ஆயிட்டே. அம்மா மட்டும் இருந்திருந்தா' என்று கொஞ்சம் சத்தமாகவே புலம்பிவிட்டு, அங்கே இருந்து, தெரிந்தவர்கள் யாராவது இருக்கிறார்களா என்பதைப் பார்ப்பதற்காக பஸ் நிலையத்திற்குள் வந்தாள்.

அவளால், தன் பார்வையை நம்ப முடியவில்லை. கண்களை அழுந்தத் தேய்த்து விட்டுக்கொண்டு, மீண்டும் பார்த்தாள்.

லோகு, கையில் ஒரு ‘சூட்கேஸுடன்' நின்று கொண்டிருந்தான். அவனைப் பார்த்ததும் திரும்பிப் போய்விடலாமா என்றுகூட உலகம்மை நினைத்தாள். 'ஏற்கனவே அவரிடம் பேசியதால் படும் பாடு போதும்'. ஆனால் அவளால் திரும்பி நடக்க முடியவில்லை . 'பராக்குப் பார்ப்பவள் மாதிரி, அங்கேயும் இங்கேயுமாய் நடந்து, கடைசியில் பஸ்ஸுக்குள் இருப்பவர் தங்கத்துரை சின்னய்யாதானா என்று பார்ப்பதற்குப் போகிறவள் போல், தன்னைத்தானே ஏமாற்றிக்கொண்டு தன்னைமீறி அவன் முன்னால் வந்து நின்றாள். அவன் பார்வை எங்கேயோ இருந்தது. அவள் லேசாக இருமிக்கொண்டாள்.

ஏறிட்டுப் பார்த்த லோகு, அப்படியே பார்த்துக் கொண்டு நின்றான். நழுவி விழப்போவதுபோல் இருந்த சூட்கேயை லேசாகத் தூக்கியபடி ஆட்டி, அதைப் பிடித்துக் கொண்டு, அவளையே பார்த்துக் கொண்டு நின்றான். சிறிது நேரம் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். மௌனம் மொழியாயிற்று. விழிகள் வாயாயின. உலகம்மைக்கு, அவன் மார்பில் தலைசாய்த்து அழவேண்டும் போலிருந்தது. அவள், அவன் மனைவியாக அங்கே வந்து நிற்பது போலவும், இருவரும் சென்னைக்குப் புறப்படுவது போலவும் கற்பனை செய்து கொண்டாள். பின்னர், வேறு பக்கமாகத் திரும்பி, கண்களைத் துடைத்துக் கொண்டாள். நேரத்தை வீணாக்க விரும்பாதவன் போல், லோகுதான் பேசப் போனான். பேச்சு வரவில்லை. இறுதியில் எப்படியோ வந்தது.

"சரோஜாவா?"

"என் பேரு உலகம்ம."

"நீ ஊருக்கு உலகம்மையா இருக்கலாம். ஆனால் எனக்கு எப்போதும் சரோஜாதான்."

"எங்க போறீங்க?"