பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88

ஒரு கோட்டுக்கு வெளியே ...



மற்ற இருவரும் சிரித்தார்கள். உலகம்மை, தன் பட்டிக்காட்டுத் தனத்தைக் காட்டிவிட்டதற்கு வருந்துபவள் போல், முகத்தைச் சுழித்தபோது அதைப் புரிந்து கொண்டு, அந்தக் காம்ப்ளெக்ஸை' விலக்கும் விதத்தில், லோகு விளக்கினான். உலகம்மை, லோகுவைப் பார்த்துக் கேட்டாள் :

"ஐயாதான் இன்ஸ்பெக்டரா?"

"ஆமா."

"சப்-இன்ஸ்பெக்டர்னு சொல்லுங்க. சர்க்கிள் காதுல விழப்போவுது."

"நான் எப்பவாவது கஷ்டம் வந்தா ஐயாகிட்ட வருவேன்னு சொல்லுங்க. ஆனால் நியாயத்துக்குத்தான் போவேன்."

"என் பேர சொல்லிக்கிட்டுப்போ. நிச்சயம் உதவுவார். இல்லையா ஸார்?"

"ஷுர், ஓ.கே. டாடா."

சப்-இன்ஸ்பெக்டர் போய்விட்டார். மீண்டும் மௌனம். உலகம்மை மொத்தமாக ஒரே நேரத்தில் பேசிவிடுவதுபோல் இனிமேல் அப்படிப்பட்ட இனிய சந்தர்ப்பம் கிடைக்காதது போல் பேசினாள்.

"எங்க சரோசாக்காவ பண்ணியிருக்கலாம். நீங்க செய்றது நல்லா இல்ல. போதாக்குறைக்கி என் பேர வேற இழுத்து விட்டுட்டீங்க. ஊர்ல ஒரே சண்ட." "அதனாலதான் சப் இன்ஸ்பெக்டரப் பற்றிக் கேட்டியா? கலாட்டா பண்ணுறாங்களா? சொல்லு. நொடியில கம்பி எண்ண வைக்கலாம். என்ன நினைச்சிட்டாங்க?"

அவன் துடித்த துடிப்பில், அவள் கிறங்கிப் போனாள். சொல்லிவிடலாமா என்றுகூட நினைத்தாள். கூடாது. கூடவே கூடாது. அவளுக்கு ஏனோ, மீண்டும் அழ வேண்டும் போலிருந்தது. சமாளித்துக்கொண்டு சமாதானப்படுத்தினாள்.

"அப்படில்லாம் ஒண்ணும் கிடையாது. நீங்க பண்ணுன கலாட்டாவுல நான் ஒங்கள, ஒங்கள வச்சிக்கிட்டு' இருக்கதா கூடப் பேசுறாங்க, அவ்வளவுதான்."