பக்கம்:ஒரு சத்தியத்தின் அழுகை.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8 ஒரு சத்தியத்தின் அழுகை


அப்போது அது முக்கியமல்ல என்று நினைத்தவர் போல், சப்பரத்திலிருந்த ஒரு கொம்பை உருவிப் போர்க்களத்தில் இறங்கினார்.

கந்தசாமி, மயக்கமாகி ரத்த வெள்ளத்தில் கிடந்தான். அரைமணி நேரத்திற்குள் எல்லாம் ஆய்ந்து, ஒய்ந்து அடங்கியது. கந்தசாமி ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போகப் பட்டான். அங்கே பிரேதப் பரிசோதனைதான் நடந்தது.

மறுநாள் போலீஸ் வந்தது. அதற்கு மறுநாள் மீண்டும் சகஜ நிலைமை திரும்பியது. 'இந்த ஊர்லயா இந்தச் சண்டை நடந்தது' என்று ஆச்சரியப்படும்படி சேரிக்காரர்கள் ஊருக்குள் வந்தார்கள். ஊர்க்காரர்கள், 'குடிப்பதற்காக'ச் சேரிக்குள் போனார்கள். ஊரின் ஒருமைப்பாடு மீண்டும் நிறுவப்பட்டது. கந்தசாமி எப்படிக் கொல்லப்பட்டான் என்பது இந்திராநகர் கொலை மாதிரி ஆகிவிட்டது.

ஆடியில் இருந்து ஐப்பசி வரைக்குந்தான்.....

முருகனுக்கு உற்சவம் தொடங்கி முடிந்தது. 'படைப்பை' எடுத்தார்கள், தேங்காய்ப் பழங்களைக் "கூறு" போட்டார்கள். கிட்டத்தட்ட நானுறு பங்கு. அந்த ஊர் வழக்கப்படி, ஆசாரி, பிள்ளை, பண்டாரம், நாடார், தேவர் ஆகிய 'பஞ்ச வர்ணங்களில்' யார் வயதில் பெரியவரோ, அவரிடம் முதல் 'பங்கை'க் கொடுப்பார்கள். இந்த வருடம் சுப்பு நாடாருக்கு, "பங்கை", நாடார் தலைவர் நீட்டிய போது, தேவர் தலைவர் "சுப்பு நாடாரை விட எங்க பெருமாள் அண்ணன்தான் மூத்தவரு" என்றார். கடந்த ஒரு மாதமாக நாடார் தலைவருக்கும் இந்தத் தேவர் தலைவருக்கும் மனஸ்தாபம்.

வயதில் மூத்த நாடார், வாங்கப் போன கையை மடக்கினார். இதேபோல் வயதான தேவர், மடக்கி வைத்த கையை நீட்ட, நாடார் தலைவர் முழங்கினார்.

"எங்க சுப்பு பெரியய்யாதான் மூத்தவரு!"

"இல்ல....எங்க பெருமாள் அண்ணன்தான்."

"தேவர... நீங்க இப்படி பேசுறது நியாயமில்ல."

"வாயை மூடும், நாடாரே!" “எங்க சுப்பு பெரியய்யாவுக்குப் பங்கு கொடுக்காட்டா நானே எடுக்கப் போறேன்."

"எடுக்கிற கையை வெட்ட எவ்வளவு நேரமாகும்?"

"வெட்டிப் பாருடா...!"

"கிட்ட வாடா...!"

விவகாரம், யாரும் எதிர்பாராமல், யாரும் கலந்துரையாடல் செய்யாமல், நாடார் தலைவராலும், தேவர் தலைவராலும் வகுப்புவாதமாகியபோது, யாருக்கும் பெருமாளிடமோ அல்லது சுப்புவிடமோ யார் மூத்தவர்கள் என்று கேட்கத் தோன்றவில்லை.