பக்கம்:ஒரு சத்தியத்தின் அழுகை.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1O ஒரு சத்தியத்தின் அழுகை


இருவரும், ஒரு வரை ஒருவர் நெருங்கி விட்டார்கள். கலகத்துக்குப் பிறகு இப்போதுதான், ஒருவரை ஒருவர் நேருக்கு நேராகத் தனிமையில் சந்திக்கிறார்கள். இருவர் கண்களிலும் நீர் சுரந்தது. ஒருவர் இன்னொருவரின் ஊனத்தை, அனுதாபத்தோடு பார்த்தார்கள். ஆண்டாண்டு கால நட்பும், பாசமும், நேசமும் அவர்களை நெக்குருகச் செய்தன.

பத்தடி தாண்டியதும் இருவரும் ஒருவரை ஒருவர் திரும்பிப் பார்த்தபோது, குளத்தில் குளித்து முடித்த காத்தாயி, ஈரப்புடவையுடன் கரைக்கு வந்தாள். காத்தாயி, கந்தசாமியின் மனைவி. அவர்கள் இருவராலும் விதவையாக்கப்பட்ட இளம் விதவை.

காத்தாயி உரக்கக் கத்தினாள்.

"அண்ணன்மாரே... ஒங்க ரெண்டு பேரைத்தான், இங்க... வாங்க... ஒங்க மேலே... எனக்குக் கோபம் இல்ல... வாங்க..."

இருவரும் வந்தார்கள்.

"உங்கள நாடாரே, தேவரேன்னு கூப்புடாமல், அண்ணன்னு கூப்புட்டதுக்கு அர்த்தம் தெரியுமா? இப்ப பாத்தீங்களா? வுங்க கோயிலுல பந்தல் போட, எங்க சேரிக்காரர்தான் காண்டிராக்ட் எடுத்திருக்கார், ஒங்க...சாதிக்காரங்க அங்க... கூடிக் கும்மாளமாடுறாங்க... என் புருஷன் சொன்னதைத்தான் ஒங்ககிட்ட சொல்லப் போறேன். உலகத்துலெ...ரெண்டே ரெண்டு சாதிதான் உண்டு. ஒண்ணு பணம் இருக்கிறவங்க சாதி. இன்னொண்ணு அது இல்லாதவங்க சாதி. இந்த ரெண்டு ஜாதிங்க தவிர... வேற சாதிங்க இருக்கப்படாது. நினைச்சிப் பார்த்தால், இல்லவும் இல்லை. பணக்காரன் என்னைக்கும் பணக்காரன் கூடத்தான் சேருவான். பணக்காரன் சாதி பார்க்காதபோது... நாம... ஏழைங்க... சாதி பார்க்கலாமா? நாடார் அண்ணாச்சி... ஒம்ம வண்டிமாட்ட எதுக்காக வித்தீரு? தேவர் அண்ண... ஒம்ம நிலம் போனதாலே... ஒம்ம நிலைமையை நினைச்சிப் பாத்தீரா? என் புருஷன் ஒங்களுக்கு என்ன கெடுதல் செய்தாரு சொல்லமுடியுமா?"


படபடவென்று பேசிய காத்தாயி, இப்போது குலுங்கிக் குலுங்கி அழுதாள். அந்தச் சத்திய அழுகையின் வெம்மை தாங்க முடியாமல் ராமசாமித் தேவரும், மாயாண்டி நாடாரும், ஒருவர் கையை ஒருவர் பிடித்துக் கொண்டார்கள்.


"கவலைப்படாதே... காத்தாயி... நீ... எங்க சாதில பிறக்காததுனாலேயோ இல்ல... எங்க கூடப் பிறக்காததுனாலேயோ... நீ தங்கச்சியா இல்லாம போயிட மாட்டேன்னு, எல்லாச் சாதிக்காரனுக்கும், எல்லா வகையிலேயும் நிரூபிக்கப் போறோம்" என்று ராமசாமித் தேவர் ஒரு கையை ஆட்டிக்கொண்டு சொல்ல, மாயாண்டி நாடார், தன் பள்ளமாய்ப் போன தோளைக் குலுக்கிக்கொண்டே அதை ஆமோதிக்க, மூவரும் ஊரைப் பார்த்துப் போனார்கள்.