பக்கம்:ஒரு சத்தியத்தின் அழுகை.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலவு காத்த பலவேசம்

பனைமட்டை நாரில் நெருக்கமாக மிடையப்பட்ட கொட்டப்பெட்டியை இடுப்பின் இடது பக்கம் குழந்தையைத் தூக்கி வைத்திருப்பதுபோல் வைத்து, இடது கை அதை அணைத்திருக்க, பெட்டியின் மேல்பாகத்தை மாராப்புச் சேலையின் ஒரு பகுதியால் மூடிக்கொண்டும், முந்தானையின் முனையை வலது கையால் பிடித்து ஆட்டிக் கொண்டும் வேகமாகத் தெருவில் நடந்து கொண்டிருந்தாள் செல்லக்கணி.

மிராசுதார் 'செவண்செருமா' மகள் கிளியம்மையிடம் அவள் என்னதான் வீம்பாகப் பேசியிருந்தாலும் அந்த வீட்டிலிருந்து வெளியே வந்ததும் அவளால் அழுகையை அடக்க முடியவில்லை. செருப்பு பிஞ்சிடுமுன்னு நாக்கு மேல பல்லைப் போட்டுக் கேட்டுட்டாளே. இவ வாயில இஸ்திரி பெட்டிய வச்சி தேச்சா என்ன! இவள் துணிய அடிச்சது மாதிரி அடிச்சி, கசக்குற மாதிரி கசக்கி, பிழியுறதுமாதிரி இவளைப் பிழிஞ்சா என்ன... எல்லாம் மெட்ராஸ் மாப்புள்ளை கிடைக்கப் போற திமுரில பேசுறா. இவள. இவள என்ன பண்ணலாம்...?

செல்லக்கணி அந்தக் குட்டாம்பட்டிக்கு வந்து மூன்று மாதங்கள் கூட ஆகவில்லை. பக்கத்திலுள்ள டவுனான தென்காசியில் பிறந்தவள். அவள் தந்தை அங்கு லாண்டிரிக் கடை வைத்திருக்கிறார். அங்கே துணி வாங்க வருபவர்களும், கொடுக்கப் போகிறவர்களும், மரியாதையோடு பேசியதைக் கேட்டுப் பழகிப்போனவளுக்கு, குட்டாம்பட்டிக்காரர்களின் குறிப்பாக கிளியம்மையின் பேச்சைக் கேட்கக் கஷ்டமாக இருந்தது.

மிராசுதார் மகளைப் பொறுத்தவரையில், செல்லக்கணியின் மாமியார் சோறெடுக்க வரும்போதெல்லாம், 'சோறு போடு மவராசி' 'சோறு போடு புண்ணியவதி' என்று ஒரு நாளைக்கு ஒரு விதமான பட்டப் பெயரைக் கிளியம்மைக்குச் சூட்டுவது வழக்கம். செல்லக்கணி அனாவசியமாய்ப் பார்த்துக் கொண்டும், அலட்சியமாய்ப் பேசிக்கொண்டும் நின்றாள். அவளைக் கிளியம்மை அவமானப் படுத்தத் துடித்தாள். தாமதமாகச் சலவை கொண்டு வந்ததைச் சாக்காக வைத்துச் சாடிவிட்டாள்.