பக்கம்:ஒரு சத்தியத்தின் அழுகை.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12 ஒரு சத்தியத்தின் அழுகை

ஊரின் வால்போல் அதன் முனையில் இருந்த தன் ஓலை வீட்டுக்கு வந்த செல்லக்கணி, கணவனிடம் கிளியம்மையின் அடாவடித்தனத்தைச் சொல்லவில்லை. எதுக்குச் சொல்லனும். சொன்னால், என்னாலதான் ஒனக்குக் கஷ்டமுன்னு சொல்லுவாவ. "குட்டாம்பட்டில மவராசா இருந்தாக் கூட என் மவளைக் குடுக்கமாட்டேன். குட்டுப் பட்டே குனிஞ்சிடோன சின்னானுக்கா கொடுப்பேன் என்று, அய்யாக்காரர் இவள் காதலை அசைத்த போதும், இவள் அசையவில்லை. பிடிவாதமாக, சின்னானை மணந்து கொண்டாள். 'அப்புறமா... நான் இல்லம்பேன். உடனே என் ராசாத்தின்னு கன்னத்த தொடுவாவ... இஸ்திரி பெட்டிய விட்டுடுவாவ... நாளைக்கு சொன்னபடி சொன்ன டயத்துல துணியக் குடுக்காட்டா நமக்கும் ஊர்க்காரங்களுக்கும் என்ன வித்தியாசம்.'

கிளியம்மையை நினைத்துக் கொண்டே தூங்கியவள், அவளை நினைத்துக்கொண்டே எழுந்தாள். 'செருப்பு பிஞ்சிடுமுன்னு கேட்டுட்டாளே... கேக்கட்டும்...

கிளியம்மையின் நினைவை வலுக்கட்டாயமாக மனத்திலிருந்து விலக்கிவிட்டு, முளையில் கட்டியிருந்த இரண்டு கழுதைகளை அவிழ்த்து விட் டு, பின்னர் ஒவ்வொரு கழுதையின் முன்னங்கால்களை இடைவெளி கொடுத்துக் கயிற்றால் கட்டினாள். கழுதைகள் கனைத்துக்கொண்டே, தத்தித் தத்தி, கண்மாய்ப்பக்கம் போய் நின்றுகொண்டன.

சத்திரப்பட்டைக் குளத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட 'ஒரு மண்ணை' (உவர் மண்; கிராமிய சோப்புப் பொடி) குவியலாக்கி விட்டு, வெளுக்கப்பட்டிருந்த. துணிகளை அடையாளம் பார்த்துப் பிரித்துக் கொண்டிருந்தாள். அவள் அருகில் இருந்த சின்னான், "துணிய அப்ப, பிரிக்கலாம்... மொதல்ல இந்தத் துணிகளுக்கு கஞ்சி போடு பிள்ள...” என்று சொல்லிவிட்டு, உள்ளுர் வி.ஐ.பி.க்களின் துணிகளை எடுத்துபோட்டுக் கொண்டிருந்தபோது, செவண் செருமாவின் தங்கையைக் கட்டினாலும் (ஒருவேளை அப்படியே கட்டியதாலோ) செவண்செருமாவுக்கு ஜென்ம எதிரியாகப் போன அவர் மைத்துனர் பலவேசம் அங்கே தோன்றினார். வந்ததும் வராததுமாக, "ஏள்ளே செல்லக்கணி... ஏன் ஒரு மாதுரி இருக்கே... சின்னான் அடிச்சானா?" என்று சொன்னபோது, சின்னான், "எங்கள்ள அப்படில்லாம் வழக்கமுல்ல மொதலாளி", என்றான்.

'ஏள்ளா மூஞ்ச தூக்கிக்கிட்டு இருக்கே..."

செல்லக்கணி சொன்னாள்: