பக்கம்:ஒரு சத்தியத்தின் அழுகை.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலவு காத்த பலவேசம் 13

"தென்காசில ராசாத்தி மாதுரி இருந்தேன். இப்ப இங்க நாயிகிட்டயும், பேயுங்கிட்டயும் ஏச்சு வாங்க வேண்டியதிருக்கு."

"பட்டுன்னு உடளா." "ஒம்ம மச்சினன் மவள்... கிளியம்ம... என்ன கேக்கக் கூடாத கேள்வில்லாம் கேட்டுட்டு..."

பலவேசம் தோளைத் தட்டிக் கொண்டார். "அவள் விஷயமாத்தான் வந்தேன். ஒங்களுக்கே தெரியும். கொண்டான் குடுத்தான்னு என் மவன் அக்னி ராசாவுக்கு கேட்டேன்..."

செல்லக்கணியால் பேசாமல் இருக்க முடியவில்லை. "ஆமாம். எங்க காதுலயும் விழுந்துது. 'பலவேசம் மவனுக்குக் குடுக்கிறத விட என் பொண் ண எருக்குழில வெட்டிப் புதைச்சிடலாமுன்னு' ஒம்ம மச்சினன் சொன்னாராமே. அக்கினிராசாவுக்கு என்ன குறையாம்? கொஞ்சம் குடி. கொஞ்சம் பொம்புள சாவாசம். மத்தபடி நல்லவர்தான். இனும் பேசி என்ன பிரயோஜனம்? மெட்ராஸ் மாப்பிள்ளைக்கி நிச்சயம் பண்ணியாச்சே? ஒம்ம நிச்சய தாம்பூலத்துக்கு கூப்புடல போலுக்கே..."

"தானா அவன் கூப்புடப் போறான் பாரு, நீ மட்டும் கொஞ்சம் தயவு காட்டுனா போதும். இந்தக் கல்யாணத்த நிறுத்திப்புடலாம்..." சின்னான், எச்சரிக்கையானான். சுதாரிப்பாகப் பேசினான். "இதுக்கு நாங்க என்ன பண்ண முடியும்? கல்யாணத்தைக் கலைக்கணுமுன்னா மொட்டக் கடுதாசி போடணும்?"

"போடாம இருப்பனா... கல்யாண மாப்பிள்ளை அப்பனும் எங்க சொந்தக்காரன்தான். மொட்ட லட்டர விசாரிக்க பையனோட தாத்தா வராரு. பழைய காலத்து மனுவடின். இப்ப விஷயம் ஒன் கைலதான் இருக்கு...”

"நான் என்னய்யா பண்ண முடியும்?" "சொல்றதக் கேளுளா.. அவரு பழய காலத்து மனுஷன்... வண்ணாத்திக்குத் தெரியாம எந்தக் கொம்பனும் கொம்பியும் காதல் பண்ண முடியாதுன்னு நினைக்கிறவரு. நீ நெனச்சா நிறுத்திடலாம்..."

சின்னான், என்ன பேசுவதென்று புரியாமல் குழம்பிய போது, செல்லக்கணி படபடப்பாகப் பேசினாள்.

"பையனோட தாத்தா எப்ப வாராரு?"