பக்கம்:ஒரு சத்தியத்தின் அழுகை.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1 4 ஒரு சத்தியத்தின் அழுகை

சாயங்காலம் என் வீட்டுக்கு வாராரு. நான் தங்கமான பொண்ணுன்னு சொல்லிட்டு எதுக்கும் வண்ணாத்திகிட்ட கேளுமுன்'னு சொல்லுவேன்... நீ 'மூணுமாசமா... தீட்டுச் சீல வெளுக்கலன்னு' சொல்லிடு. அவரு, பொண்ணுக்கு மூணுமாசமுன்னு தீர்மானிச்சிடுவாரு. சாயங்காலம் அவர இங்க கூட்டி வரட்டுமா?"

செல்லக்கணி, சிறிது யோசித்தாள். சின்னானின் கோபத்தைப் பொருட்படுத்தாமல் நிதானமாகப் பேசினாள்.

"இங்க வேண்டாம். ஒம்ம மச்சினனுக்கு உடம்புல்லாம் கண். பாவூர் சத்திரத்திற்குத் துணிகொண்டு போறேன். பஸ் ஸ்டாண்ட் பக்கம் நிக்கச் சொல்லும், அடையாளத்துக்கு ஒம்ம கடெக்குட்டி பொண்ண அனுப்பிவையும். நீரு வராண்டாம். ஏன்னா, சந்தேகம் வரப்படாது. நான் முடிச்சிடுறேன்... என்னை அவமானமா பேசுன கிளியம்மையை வைக்க வேண்டிய இடத்துல வச்சாத்தான் என் மனசு ஆறும். அவளுக்கு ஒம்ம குடிகார மவன்தான் லாயக்கு."

பலவேசம், லேசாக ஏற்பட்ட கோபத்தைச் சிரிப்பால் மறைத்துக் கொண்டார்.

"இந்தாடா சின்னான், இருநூறு ரூபாய். ஒரு கழுத வாங்கணுமுன்னு சொன்னல்லா? என் பேருல ஒரு கழுதை வாங்கு. இது கடன்தான். வட்டி வாண்டாம். செளரியப்படும் போது பணத்தைக் கொடு" என்றார்.

சின்னான் பணத்தை வாங்கிக் கொள்ளவில்லை. செல்லக்கணி வாங்கிக் கொண்டாள்.

திட்டமிட்டபடி, அவள் பாவூர் சத்திரத்தில், பையனின் தாத்தாவிடம் சொல்ல வேண்டியதை, சொல்ல வேண்டிய முறையில் சொல்லிவிட்டாள்.

ஒரு வாரம் ஓடியது.

கிளியம்மையின் கல்யாணம் மேளதாளத்துடன், பத்தாயிரம் ரூபாய் வரதட்சணையுடன், திறந்த கார் ஊர்வலத்துடன் நல்லபடியாக முடிந்தது. இலவுகாத்த பலவேசமும், கல்யாணத்தில், வேண்டா வெறுப்பாகக் கலந்து கொண்டார். ஒரு வேளை மாப்பிள்ளை, தாலி கட்டுற சமயத்தில் கலாட்டா செய்யலாம் என்றும், அந்த இடத்தில் மகனை அமர்த்தி விடலாம் என்றும் நினைத்திருந்தார். தாலி கட்டப்படும்போது, அவருக்குத் தன் கழுத்தை எவரோ அறுப்பது போலிருந்தது.