பக்கம்:ஒரு சத்தியத்தின் அழுகை.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒரு நட்பின் ஆன்மா 17

"நோ. நோ... நான் நீ அனுப்பின கார்டை சத்தியமாய்ப் பாக்கல...'

'ரொம்ப பிலியோ?”

"நாய்க்கு வேலையுமில்ல. உட்கார்ந்திருக்க நேரமுமில்லன்னு பழமொழி சொல்லுவாங்கள்ள அந்தக் கதை தான் நம்ம கதையும். என்னடா சாப்பிடுற..."

“எது கிடைச்சாலும்."

நான், மோகனையே பார்த்துக் கொண்டிருந்தேன். கல்லூரியில் நான் வறுமையில் வாடிக் கொண்டிருந்தபோது, எனக்குத் தேவையான போதெல்லாம் உதவி செய்தவன் இவன். படிப்பு முடிந்ததும் வேலைக்கு மனுப் போட வேண்டுமென்றால், அப்ளிகேஷன் பாரங்களை மட்டுமில்லாமல், தேவையான 'போஸ்டல்' ஆர்டர்களையும் வாங்கி வருபவன் இவன்.

ஒரு தடவை, கிளார்க் வேலைக்குரிய விண்ணப்பம் ஒன்றை நான் பூர்த்தி செய்து கொண்டிருந்தபோது 'மடையா' இந்த வேலை என்னை மாதிரி கஜினிமுகம்மதுகளுக்காக இருக்கு. அறுநூறு ரூபாய்க்குக் குறைந்த வேலைக்கு மனு ப் போட்டால், தொலைச்சிப்பிடுவேன்' என்று செல்லமாக அதட்டி, அந்த விண்ணப்பத்தைக் கிழித்துப் போட்டவன் இவன்.

பள்ளிக்கூடக் காலத்தில் இருந்தே நாங்கள் உயிர் நண்பர்கள். பி. யூ. ஸி.யை பல தடவை சந்தித்த அவன், இறுதியாக அரசாங்க இலாகா ஒன்றில் கிளார்க்காகச் சேர்ந்தான். நானும் அவனுடன் தங்கிக்கொண்டே படித்தேன். சம்பளத்தில் கால்வாசியை எனக்குச் செலவிட்டு விடுவான். அவனுக்குத் திருமணமானதும், நான் பழையபடி ஹாஸ்டலுக்குப் போக முயற்சித்தேன். அவன் விடவில்லை. அவன் மனைவியும் என்னைச் சொந்த சகோதரனாக நினைத்தாள். அவர்கள் செய்திருக்கும் உதவியை ரூபாய்க் கணக்கில் பார்த்தால், இப்போது நான் வாங்கும் சம்பளத்திற்கு, சாதாரணம். ஆனால் மதிப்பு...? என்னால் ஈடுகட்ட முடியாது.

ஒரு நாள் -

வழக்கமாக என்னை அதட்டிக் கூப்பிடும் மோகன், 'சந்திரா' என்று என் பெயருக்குரிய கோளத்தின் குளிர்ச்சியுடன் கூப்பிட்டான். அவன் மனைவி, வழக்கத்திற்கு மாறாக, கதவுக்குப் பின்னால் நின்றுகொண்டு, தலையை மட்டும் காண்பித்துக் கொண்டிருந்தாள். மோகன், எடுத்த எடுப்பிலேயே கேட்டுவிட்டான்.

"ஏண்டா... என் மச்சினி இந்திராவைப் பற்றி என்னடா நினைக்கிறே..."

"அவளுக்கென்னடா... ஆயிரத்தில் ஒருத்தி..."