பக்கம்:ஒரு சத்தியத்தின் அழுகை.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

ஒரு சத்தியத்தின் அழுகை


"அப்புறம்... ஒரு விஷயம்டா... எனக்கு நெருங்கினவர் ஒருவரு... ஒரு வேலை போட்டுக்கொடு..."

“என்னடா... என் பையில் வேலை இருக்கிறது மாதிரி கேக்குற."

"நீ யாருக்கும் சிபாரிசு செய்யறதில்லையா?"

"அதை ஏன் கேக்குற... வேண்டியவங்க சொல்றாங்களேன்னு... வேற கம்பெனியில இருக்கிற எக்ஸிகியூட்டிவ் ஃபிரண்ட்ஸ் கிட்டச் சொல்லி... நிறையப் பேருக்கு வேலை வாங்கிக் கொடுத்தேன். அப்புறந்தான் விவடியம் தெரிந்தது, என்கிட்ட யாரையாவது கூட்டிக்கிட்டு வருகிறவங்க ரேட் பேசிக்கிட்டு வந்திருக்காங்கன்னு. எனக்கு ஆயிரம் ரெண்டாயிரம் கொடுக்கணுமுன்னு. அப்பாவி இளைஞர்கள் கிட்ட வசூலிச்சிருக்காங்க... இந்தக் காலத்துல... யாரையும் நம்புறாப் போல இல்லடா.”

"ஏண்டா சுத்தி வளைச்சிப் பேசுற? எனக்கு ரொம்ப வேண்டியவரு ஒன்னால... வேலை கொடுக்க முடியுமா... முடியாதா?”

"டேய்... இன்னும் பிறத்தியாருக்கு உதவனுங்கற புத்தி உன்னை விட்டுப் போகலியா? எனக்கு உதவுனே... அதனால உனக்கு என்ன கிடைச்சுது?"

"டேய்...டிப்ளமஸ்ல்லாம் வேண்டாம்... எனக்கு அவரு ரொம்ப வேண்டியவரு. என்னையே நம்பிக்கிட்டு இருக்காரு."

"வேலை கிடைக்கிற வரைக்கும் காலைப்பிடிப்பாங்க... அப்புறம் தலையைப் பிடிப்பாங்க... உனக்கு ஏன்?"

"உம்... உன்னைச் சொல்லிக் குற்றமில்லை. எனக்கு இன்னும் வேணும். எல்லாம் எனக்கு வாய்ச்சவளால. அறிவு கெட்ட மூதேவி... சந்திரன் மாறியிருப்பாண்டி, அவன்கிட்ட உதவிக்குப் போகக்கூடாதுன்னேன்... கேட்டாத்தானே."

"தங்கச்சி சிபாரிசா... மடையா, முதல்லே இதைச் சொன்னால் என்ன? ”

"என் வீட்ல ஒரு போர்வஷினை புதுசா கல்யாணம் ஆன ஒரு ஜோடிக்கு விட்டேன். அவனுக்கு ஏதோ ஒரு கம்பெனில வேலை. மூணு மாசத்துக்கு முன்னால கம்பெனியை இழுத்து மூடிட்டாங்க. நான் வீட்டைக் காலி பண்ணச் சொன்னேன். ஆனால் உன் தங்கச்சிக்காரி இவன் மனைவிக்குக் 'குளோஸ்' ஃபிரண்டா மாறிட்டாள். எனக்குத் தெரியாமலே அரிசி கிரிசியெல்லாம் கொடுக்கிறாள். நான் சத்தம் போட்டால் அழுவுறாள். எப்படியும் சிநேகிதி புருஷனுக்கு நான் எம்ப்ளாய்மென்ட் ஆபீஸ்ராய் மாறனுமாம். என்ன பண்றது. ஏற்கனவே அவளுக்கு ஒரு ஏமாற்றம். இதுலயும் ஏமாற்றமுன்னா ஹார்ட் அட்டாக் தான் வரும்..."

எனக்கு அவன் குத்தல் புரிந்தது. சமாளித்தேன்.