பக்கம்:ஒரு சத்தியத்தின் அழுகை.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒரு நட்பின் ஆன்மா 21

“ஏண்டா இல்லாதது பொல்லாததெல்லாம் கற்பனை பண்ற? அந்த ஆளுக்கு வேலைதானே வேணும் கொஞ்சம் டயம் கொடு. ஆனால் ஒரு நிபந்தனை."

“என்னடா புதுக்குண்டு?"

"நீயும் தங்கச்சியும் என் வீட்டுக்கு வரணும். அப்புறந்தான் வேலையைப் பற்றி யோசிப்பேன்..."

"கண்டிப்பா வர்றோம். ஆனால் இதையும் அதையும் முடிச்சிப் போடாதே."

இப்போது மானேஜிங் டைரக்டர் என்னை உடனடியாகப் பார்க்கும்படி இன்டர்காமில் பேசிவிட்டார். என் வேலைப் பளுவைப் புரிந்து கொண்டவன் போல், மோகன், நான் எவ்வளவு சொல்லியும் கேளாமல் போய்விட்டான்.

எம். டி. யிடம் பேசிவிட்டு வந்த என் சிந்தை முழுதும் அவனே வியாபித்திருந்தான். ஆசாமி எப்படி மாறி விட்டான் ஒரு வார்த்தை 'உன் பொண்டாட்டி, பிள்ளைங்க செளக்கியமான்னு கேட்கவில்லை. நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்திப்பதில் ஏற்படும் ஒரு துள்ளலோ, ஒரு அன்னியோன்னியமோ அவனிடம் இல்லை. முகத்தில் மகிழ்ச்சிக்குப் பதிலாக ஒருவித பேரத்தின் சாயல்தான் தெரிந்தது. எதையோ பறிகொடுத்த ஏக்கம் தெரிந்தது.

திடுதிப்பென்று. மோகன், அவன் மனைவி, அவள் மடியில் ஒரு குழந்தை, இன்னொரு இளம் ஜோடி, என் அலுவலக அறைக்குள் வந்து நின்றார்கள். வியப்பில் என்னால் அவர்களை உட்காரக்கூடச் சொல்ல முடியவில்லை. மோகன், இப்போது உரிமையோடு பேசினான் என்பதை விட, அப்படிப் பேசுவதற்கு முயற்சி செய்தான் என்றே சொல்லலாம்.

டேய்... நான் சொன்னது இவர்தான்... பெயர் கோபாலன். நாலுமாசமா வேலை இல்லாமல் திண்டாடுறார். இவருக்கு வேலை கொடுத்தால்... எனக்குக் கொடுத்தது மாதிரி."

நான், கோபாலனை நோட்டம் விட்டேன். சாதாரணமான உயரம் என்றாலும், கழுத்தைச் சுருக்கி வைத்துக் கொண்டு அவன் நின்ற முறையில் குள்ளமாகத் தோன்றினான். நாற்காலியைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, அவன் உட்கார்ந்திருப்பதைப் பார்த்ததும், அவன் சொந்தக் காலில் நிற்க சுய தைரியம் இல்லாதவன் என்று, மனோதத்துவத்தைப் பாடமாகப் படித்த எனக்கு நன்றாகப் புரிந்தது. அவன் கண்கள் 'இன்டர்காமையே' வெறித்துப் பார்த்தன. மனுஷனுக்கு வேலை கிடைக்குமா என்பதைத் தெரிந்து கொள்வதைவிட, அந்த இன்டர்காம், மொஸாயிக் தரை, டிஸ்டம்பர் அடித்த சுவர்கள் ஆகியவற்றைப்பற்றித் தெரிந்துகொள்வதில் அக்கறை அதிகம் இருப்பதுபோல் தோன்றியது. அவனது 'குணாதிசயங்களுக்கு'