பக்கம்:ஒரு சத்தியத்தின் அழுகை.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28 ஒரு சத்தியத்தின் அழுகை

அஞ்சலைதான் தயங்கித் தயங்கிப் பேச்சைத் துவக்கினாள். "வுட்டுக்காரம்மா... ஒரே இருட்டா கீது... வுட்டுக்குள்ளே எது எங்கயிருக்குன்னு தெரியல... சமைக்கணும்... லைட் பூடும்மா..."

வுட்டுக்காரம்மா அவளை, அலட்சியமாகப் பார்த்தாளே தவிர, பதிலளிக்கவில்லை. பழ வியாபார ஆயாவும் கேட்டுப் பார்த்தாள்.

"வுட்டுக்காரம்மா... இந்த கியவியால ஒண்னும் முட்யல... அழுவுன பயங்கல... தனியா பிரிக்கணும்... லைட் பூடும்மா..."

"வுட்டுக்காரம்மாள் 'பூட்டாள்',. அவர்களுக்கு பதிலளிக்காமல், அலட்சியமாக, தன் அறைக்குள் நுழைந்தாள். 'மெயின்' போடப் போயிருப்பதாக நினைத்த அந்தப் பெண்கள், வெளிச்சத்திற்காகக் காத்து நின்றார்கள். பிறகு "வாங்க... அவ ஆட்டுக்குள்ளேயே போயி கேக்கலாம்" என்று அஞ்சலை சொல்லிக்கொண்டே படி ஏறினாள். இதர நால்வரும் பின்தொடர்ந்தனர்.யார் அது?” "நாங்கதாம்மா..." ‘'எதுக்கு வந்திங்க?" "லைட் பூடும்மா... ஒரே இருட்டா கீது." "இது என்னடி புதுச்சட்டம்... இப்போ மணி அஞ்சரை தான் ஆவுது... ஆறரைக்குத்தான் லைட்டு..."

"லைட்டு இருக்கதே. இருட்ட நீக்குறதுக்குத்தாம்மா... இப்போ கெட்டியாய் இருட்டிட்டு..."

'அஞ்சலை... வீணா கலாட்டா பண்ணாத... லைட்ட பூட முடியாதுன்னா பூட முடியாதுதான். சும்மா... தொண்ட வலிக்க கத்தாத... படியேறி வந்த அளவுக்கு உங்களுக்குத் தைரியம் வந்துட்டா...'

"உன் வுட்ல மட்டும் லைட்டு எரியணும்... எங்க வீட்ல எரியப் பூடாதா... நீ செய்யுறது நாயமாம்மா..."

"என்னடி பண்ணணுங்கற இப்போ?... லைட் பூட முடியாது... இருக்க இஷ்டமிருந்தா இரு... இல்லன்னா காலி பண்ணிடு..."

பழக்கார ஆயா, இடைமறித்தாள். "அவ விபரமில்லாத பொண்ணு. அறியாதவ... தெரிஞ்சும் தெரியாம பேசுவா. கண்டுக்காதம்ம... ஒரே இருட்டா கீதேன்னு சொல்றதுக்கு வந்தம். மத்தபடி... ஒண்ணுமில்ல..."

"என்ன ஆயா... நீயும் அவள் கூட சேர்ந்துக்கிட்டு வந்துட்ட... இந்த வீட்ல நீயும்... அஞ்சு வருஷமா கீறியே... நீயே... நாயத்த சொல்லு... எப்போவாவது ஆறரைக்கு முன்னால லைட் பூட்டிருக்கமா..."