பக்கம்:ஒரு சத்தியத்தின் அழுகை.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குடித்தனம் 29

"இருட்டாகீதேன்னு சொன்னோம்." "நீங்க கொடுக்கிற முப்பது ரூபாய்ல இப்படி லைட் பூட்டா ஆண்டியாய் பூடவேண்டியது தான்... கரெண்ட் பில்ல கட்டுறது யாரு? இனிமே இப்படி படியேறி வந்திங்கன்னா... நான் பொல்லாதவளாயிடுவேன்... அஞ்சல உன் ராங்கில்லாம் இங்க செல்லாது... பேசாம... அடுத்த மாசம் ஒண்ணாம் தேதி காலிபண்ணிடு...”

"ஏம்மா அனாவசியமா பேசுறீங்க... லைட்டு கேட்டோம்... முடியாதுன்னுட்டே... அத்தோட விட்டுடேன்... காலிபண்ணு கீலி பண்ணுன்னு ஏன் அனாவசியமா பேசுற..."

“ஏண்டி... உன் புருஷன் தேக்கு மரம் மாதிரி ஜாம் ஜாமுன்னு இருக்கிற தைரியத்துல பேசுறியா... எங்ககிட்டேயும் ரெளடிங்க இருக்காங்கடி..."

“பொம்மனாட்டிங்க பேச்சில... ஏம்மா ஆம்பிளங்கள இழுக்கிற? லைட்டு பூடுன்னு கேட்டதுக்கு, தேக்கு மரங்கிற, ரெளடிங்கள கூப்பிடுவேங்கற நாயமா..."

"சரி உன்கிட்ட பேசுனா... என் மதிப்புதான் பூடும்... அடுத்த மாசம் நீ காலி பண்னியாகணும்..."

"மூணு மாச அட்வான்ஸ் முள்ளங்கி பத்த மாதிரி சொளையா கொடுத்திருக்கோம்... நீ நினைச்ச நேரத்துல காலி பண்றதுக்கு நாங்க ஆளுங்கல்ல...'

"உன்னை காலி பண்ண வைக்கலன்னா என் பேரு காமாட்சி இல்ல..."

"நான் காலி பண்ணிட்டா, என்பேரு அஞ்சலை இல்ல..." நான்கு பெண்களும், அஞ்சலையை இழுத்துக்கொண்டு போனார்கள்.

ஆறரை மணிக்கு லைட் போடப்பட்டது. அஞ்சலையின் கணவன் ஒன்பது மணிக்கு வந்தான். நடந்ததை அவனிடம் கூறினாள் அஞ்சலை. அவன் அவளைத்தான் 'சத்தம்' போட்டான். பேசிக் கொண்டிருந்ததால், அவன் சாப்பிடுவதற்கு ஒன்பதரை மணியாகிவிட்டது. அவன் தட்டில் கை வைக்கும்போது, 'வுட்டுக்காரம்மா' மெயினில் கைவைத்தாள். அஞ்சலையால் தாள முடியவில்லை. வெளியே வந்து கத்தினாள்.

"என்னம்மா பொல்லாத வீடு வச்சிருக்கே... ஒரு வார்த்தை சொல்லிட்டு, 'ஆப்' பண்னக் கூடாது?... ஐய... அவரு சாப்பிடுற டயம்தானா உனக்குக் கிடைச்சது?"

அஞ்சலையின் கணவன் வெளியே வந்தான்.