பக்கம்:ஒரு சத்தியத்தின் அழுகை.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கமலா அழுகிறா - 39

சாய்ஞ்சுக்கங்க அப்பா, என்று சொல்லிவிட்டு, ஒரு நாற்காலியில் உட்கார்ந்தாள். அவள் தந்தை ராமநாதனுக்கு அறுபது வயது இருக்கலாம். கிழவருடன் பேசினார். ஆனால் அவருக்குப் பசி வாயை அடைத்திருப்பதை, அவருக்குப் பேச விருப்பமில்லை என்று வேறுவிதமாக எடுத்துக்கொண் டு, மகளிடம் பேசிக் கொண்டிருந்தார்.

மணி எட்டாகி விட்டது.

கமலா இன்னும் சமையலறைக்குள் போகவில்லை... கிழவர் வயிற்றைப் பிடித்துக் கொண்டார். அவளோ, நீங்க ஏன் தோசையை அப்படியே வச் சிட்டிங்க?' என்று தந்தையிடம் கேட்டுக் கொண்டிருந்தாள். பிறரு இருவரும் மாலையில் தாங்கள் சாப்பிட்ட ஒட்டலின் தரத்தைப் பற்றியும் ஜனதா சாப்பாடு பற்றியும் பேசிக் கொண்டிருந்தார்கள். கிழவர், வயிற்றில், இரண்டு கைகளையும் வைத்துக் கொண்டார்.

ஒருவழியாக ஒன்பது மணிக்கு, கமலா சமையலறைக்குள் போனாள். கிழவர் அந்த அறையையும் அவள் நடமாட்டத்தையும் பார்த்துக் கொண்டிருந்தார். துடித்த வயிற்றுக்கு, ஆடும் கைகளை அணைப்புக் கொடுத்து ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார்.

பத்து மணிக்கு உணவு பறிமாறப்பட்டது. "வாங்கப்பா," என்று தந்தையைக் கனியக் கனியச் சொல்லி விட்டு, மாமனாரைத் தட்டுமுன் உட்காரும்படி எரிய எரியப் பார்த்தாள். "உங்களுக்குப் பைல்ஸ் இருக்கிறதினாலே கருணைக் கிழங்கு குழம்பு வச்சேன். புளி அதிகமாகச் சேர்த்திருக்கேன். காறாது" என்று தந்தையிடம் சொன்னாள்.

ராமநாதனுக்கு நான்கு நாள் ராஜயோகம். மகளுடனும், பேரனுடனும் பகலில் வெளியே போய்விடுவார். இதனால் கிழவர் சில சமயம் பட்டினி கிடக்க நேர்ந்தது. அவர்கள் வெளியே போகும்போதெல்லாம், அந்த ஈலிசேர் உள்ளே போய்விடும்.

ஒருவழியாக அன்று காலையில் ராமநாதன் ஊருக்குப் புறப்பட்டார். மகள் செய்து கொடுத்த இனிப்புப் பண்டங்களை ஒரு பையில் போட்டு வைத்துக் கொண்டு அதில் ஒன்றைக் கிழவருக்கு நீட்டினார். அப்போதுதான், இப்படிப்பட்ட ஒன்று வீட்டில் உருவாகியிருப்பதைத் தெரிந்த கிழவர் வேண்டாம் என்று சைகை செய்தார்.