பக்கம்:ஒரு சத்தியத்தின் அழுகை.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 ஒரு சத்தியத்தின் அழுகை

மகள்காரி கனிவோடு தந்தையைப் பார்த்தாள். "உடம்பை ஜாக்கிரதையாப் பார்த்துக்குங்க அப்பா. ஏற்கனவே உங்களுக்கு பைல்ஸ். இப்போ வாதம் வேறயா?"

'உடம்புக்கு எப்படி இருந்தால் என்னம்மா! சீக்கிரமா ஆண்டவனோட போய்ச் சேர்ந்துடனும்." "என்னப்பா இப்படிப் பேசுறீங்க?" "ஒன்கிட்ட சொல்லாமல் யார்கிட்ட அம்மா சொல்றது? இந்த நாலே நாள்தான் நான் இந்த வருஷத்துல வாழ்ந்த உண்மையான நாட்கள். ஊருக்குப் போனதும் நரகந்தான். உன் அண்ணிக்காரி ஒருநாள்கூட வயிறாரச் சோறுபோடமாட்டாள். தெரு நாயை நடத்துற மாதிரி நடத்துறா. உன் அண்ணன், என்னைக்காவது ஒருநாள் எனக்கு நல்ல பலகாரம் வாங்கிட்டு வந்துட்டாபோதும். அன்றைக்கு முழுதும் அவன்கூட வேற சாக்கில் சண்டைக்குப் போவாள். என்னையும் சாடைமாடையாய்த் திட்டுவாள். நான் உயிரோட இருக்கறதே தப்பும்மா."

ராமநாதனின் கண்கள் கலங்கின. கமலா அழுதே விட்டாள். "இங்கேயே இருங்கப்பா. உங்கள ராஜா மாதிரி கவனிச்சுக்கிடுறேன்." கேவலுக்கிடையே கூறினாள். ராமநாதன், மகள் முதுகைச் செல்லமாகத் தட்டிவிட்டுப் போய்விட்டார்.

அன்று மத்தியானம் சாப்பாடு ஆகவில்லை. கமலாவுக்கு அழுவதற்கே நேரம் போதாததால், சமையலறைக்குள் அவளால் போக முடியவில்லை. எப்படி இருந்த அப்பாவை, அந்த மூதேவி அண்ணிக்காரி இப்படி நடத்தியிருக்கிறாள்! அவள் உருப்படுவாளா? வயிறாரச் சோறுபோட மாட்டாளாமே! சாடைமாடையாய்த் திட்டுவாளாமே! அடி பாதகி ஒன் அப்பனுக்கும் இதுமாதிரி வராமல் போகாது. வினை விதைக்கிறவள் வினையை அறுத்துத் தாண்டி ஆகணும்.

அண்ணிக்காரியை மனத்தில் சபித்துக் கொண்டும், சில சமயம் தன்பாட்டுக்கு உரக்கச் சொல்லிக் கொண்டும், அழுதுகொண்டே இருந்தாள் கமலா. அதனால் மணி பகல் இரண்டாகியும் கிழவருக்கு எதுவும் கிடைக்கவில்லை.

கமலா இன்னும் அழுவதை நிறுத்தவில்லை. கிழவர் பசி தாங்க முடியாமல், வாஷ்பேசினில் குழாயைத் திறந்து தண்ணிரைக் குடித்துக் கொண்டிருக்கிறார்.