பக்கம்:ஒரு சத்தியத்தின் அழுகை.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானப்பரிணாமம் 43

ஒரு மணி நேரத்துக்கு முன்னால் - குவியல் குவியலாக மண்டிக் கிடந்த மரத்தொகுதியில் ஒரத்தில் இருந்த ஒர் ஆலமரத்தில் ஒருசேர அமர்ந்து, அதன் பழங்களை இந்தக் குரங்குகள் தின்று கொண்டிருந்தபோது எந்தவிதமான சத்தத்தையும் எழுப்பாமல், ஒரு சிறுத்தை மரத்திலேறி வருவதை, இதரக் குரங்குகள் பார்க்கவில்லை. தலைமைக் குரங்கு பார்த்துவிட்டது. உடனே பயங்கரமான ஒலியை எழுப்பியது. அது உச்சியில் இருந்ததால் இன்னொரு மரத்துக்குத் தாவி, எளிதில் தப்பியிருக்கலாம். இதரக் குரங்குகள் மொத்தமாகத் தப்புவது கடினம். அதற்குள் மரம் இரண்டாகக் கவுணாகும் இடத்துக்குச் சிறுத்தை வந்து விட்டது. தெற்குப் பக்கம் வழுக்குப்பாறை. தாவ முடியாது. கிழக்குப் பக்கமும், வடக்குப் பக்கமும் பள்ளத்தாக்கு. விழமுடியாது. அவை தாவக்கூடிய ஒரே ஒரு பக்கம் மேற்குப் பக்கம்தான். அங்கே சிறுத்தை.

இரண்டு குரங்குகள் கிடைத்துவிட்டால் சிறுத்தை மற்றவற்றைப் பின்தொடராது என்பது குரங்குகளுக்கே தெரிந்த விஷயம்தான். இருப்பினும் அந்த இரண்டையும் இழந்து விட்டுத் தப்பிப்பதை, தலைமைக் குரங்கு விரும்பவில்லை. மரணத்தின் உச்சி போலிருந்த அந்த உச்சாணிக் கொம்பிலிருந்து, அது சற்றுக் கீழே இறங்கியது. எல்லாக் குரங்குகளையும் ஒர் அதட்டல் போட்டு, தன் பக்கம் வரவழைத்து, அரை வட்டமாக வியூகம் வகுத்துக் கொண்டது. சிறுத்தை எந்த இடத்தில் பாய்ந்தாலும் அதை வளைத்துக் கடித்து விடலாம். கீ. கீ. கீ... என்ற அச்சுறுத்தும் குரலுடன், தலைமைக் குரங்கு முழக்கமிட்டதைப் பார்த்த சிறுத்தை சிறிது யோசித்தது. அது ஒரு மூடச்சிறுத்தையாக இருக்க வேண்டும். குரங்குகள் எப்படித்தான் வியூகம் அமைத்தாலும் பாய்கிற வேகத்தில் பாய்ந்து, மீள்கிற வேகத்தில் மீண்டால் அவற்றால் ஒன்றும் செய்ய முடியாது என்பதை அறியாத ஜன்மம் அது. அதோடு ஏற்கனவே காட்டு நாய்களால் வளைக்கப்பட்டு, எப்படியோ தப்பித்து வந்த அதனிடம், அந்த அனுபவம் பேசியிருக்க வேண்டும். ஏறிய சிறுத்தை, கீழே இறங்கி, மீண்டும் ஏறலாமா என்று பார்த்த போது, குரங்குக் கூட்டத்தின் முன்னணியில் நின்ற தலைமைக் குரங்கு சிறுத்தை மேல் பாயப் போவதுபோல் பல்லைக் கடித்து, காலைத் துக்கி, கையை ஆட்டி, பாய்ச்சா' பண்ணியது. இதைப் பார்த்த சிறுத்தை, அருகேயிருந்த ஒரு குகைப் பக்கமாக நடக்கத் தொடங்கியது. அந்தச் சமயத்தைப் பயன்படுத்தி, எல்லாக் குரங்குகளும் இங்கே வந்துவிட்டன. தப்பித்த மகிழ்ச்சியில் பின்னுக்கு நடந்து தப்புவித்த தலைவனுக்கு அஞ்சலி செலுத்திக் கொண்டிருந்தன.