பக்கம்:ஒரு சத்தியத்தின் அழுகை.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானப்பரிணாமம் 45

பல்லைக் கடித்து, கைகளைத் தூக்கி, பாறையில் அடித்தது. உடனே, தலைவனுக்கு இன்னும் வழிபாட்டு மோகம் தீரவில்லை என்று நினைத்து, சில குரங்குகள் மீண்டும் பின்னால் வந்து வாலைத் துக்கின. அப்படியும் அதன் கோபம் அடங்குவதற்குப் பதிலாக, அதிகரிப்பதைப் பார்த்து, குரங்குகள் தத்தம் தலைகளைக் கைகளால் பிய்த்துக் கொண்டிருந்தபோது, தலைமைக் குரங்கு அவற்றை நெட்டித் தள்ளி, அரைவட்ட வரிசையாக நிற்க வைத்தது. இரண்டு ஒரங்களிலும் வலுவான குரங்குகளை நிற்க வைத்துவிட்டு, இது வரிசைக்கு முன்னால் வந்து நின்றது.

நேரம் ஆகிக் கொண்டே இருந்தது. சில குரங்குகள் தூங்கத் தொடங்கின. உடனே தலைமைக் குரங்கு அவற்றைக் கையால் பிறாண்டியது. குரங்குகள் மத்தியில் இலேசாகப் பரபரப்பு. இலேசான எரிச்சல். சரியாக அஞ்சலி செய்யாத அந்தத் தடிக் குரங்கு, "பார்த்தாயா . . . இவனோட . . . தர்பாரை?" என்பது மாதிரி இதர குரங்குகளுடன் கண்களால் பேசிக் கொண்டிருந்தது இரவுப் பொழுது ஒரு கட்டத்துக்கு வந்தபோது, எல்லாக் குரங்குகளுமே தூங்கின. ஆனால் தலைமைக் குரங்கு தூங்கவில்லை. தூக்கம் வருவதுபோல் தோன்றும் போதெல்லாம் இலேசாக உலாத்தியது.

பொழுது புலர்ந்தது.

எல்லாக் குரங்குகளுக்கும் கடுமையான பசி. சிறுத்தை மரத்தில் ஏறிய சமயத்தில்தான், அவை பழம் தின்னத் தொடங்கின. பறித்த பழங்களைப் பறிக்கப்பட்ட இடங்களிலேயே விட்டு விட்டு அவை ஓடிவந்து விட்டன. அதிலிருந்து இன்னும் சாப்பிடவில்லை. குரங்குத்தனமான பசி. அந்தப் பசியில் சிறுத்தை பற்றிய அபாயம், அவற்றுக்குப் பெரிசாகத் தெரியவில்லை. முன்பு சிறுத்தை வந்த அதே மரத் தொகுதிக்கு ஓடுவதற்கு அவை முன்னங்கால்களை அழுத்தி, பின்னங்கால்களைத் தூக்கியபோது, தலைமைக் குரங்கு பயங்கரமாகக் கத்தியது. எங்கேயும் போக வேண்டாமாம், அங்கேயே இருக்க வேண்டுமாம்.

குரங்குகள் பொறுமை இழக்கத் தொடங்கின. குட்டிக் குரங்குகள் கத்தத் தொடங்கின. போக வேண்டா மென்றால், எப்படிப் பசியை அடக்குவது? குரங்குகள் சொல்லி வைத்தாற்போல் முகத்தைச் சுழித்தன. அந்தத் தடிக் குரங்கு இப்போது சற்று வலுவாகவே முணு முணுக்கத் தொடங்கியது. தலைமைக் குரங்குக்கும் லா அண்ட் ஆர்டர் நிலைமை புரிந்து விட்டது. இருந்தும் அதன் உறுதி குலையவில்லை. அதே சமயம் அதன் கண்களில் அன்பு வெள்ளம் பாய்ந்தது.