பக்கம்:ஒரு சத்தியத்தின் அழுகை.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 ஒரு சத்தியத்தின் அழுகை

இந்தச் சமயத்தில், சற்றுத் தொலைவில், நாலைந்து இளநீர்த் தேங்காய்கள் நன்றாகச் சீவப்பட்டு, ஐம்பது பைசா அளவு ஒட்டையுடன், கும்பம் போல் இருப்பதைக் குரங்குகள் பார்த்தன. தலைமைக் குரங்கு உத்தரவிடுவதற்கு முன்னதாகவே, அவை அவற்றை நோக்கி ஓடின. உடனே தலைமைக் குரங்கு ஓடியது. தடிக் குரங்கு உட்பட, பல குரங்குகள், தேங்காய் துவாரங்களுக்குள் கைகளை விடப் போன சமயம் தலைமைக் குரங்கு, பிரஜைகளைச் சிறிது கடித்துப் பின்னுக்குத் தள்ளியது. விஷயம் அதுக்குப் புரிந்து விட்டதே காரணம். மனிதர்கள் வைத்திருக்கும் கண்ணிகள் அவை. தேங்காய்களுக்குள் கைகளை விட்டுவிடும் குரங்குகள், பின்னர் கைகளை முஷ்டிகளாக்கி, அந்த முஷ்டிகளைப் பிரிக்காமலே கைகளை வெளியே எடுக்க முயற்சி செய்து, எடுக்க முடியாமலும், தேங்காயுடன் ஒட முடியாமலும் அங்கேயே சுற்றிச் சுற்றி வரும்போது பிடித்துக் கொள்வதற்காகக் குரங்காட்டிகள் வைத்திருக்கும் கண்ணிக் காய்கள் என்பது தலைமைக் குரங்குக்குப் புரிந்துவிட்டது. இதைப் புரிந்து கொள்ளாத சக தோழர்களை அது பயங்கரக் கூச்சலால் அடக்கி, அவற்றைப் பின்னுக்குக் கொண்டுவந்து, மீண்டும் அந்தப் பாறையிலேயே உட்கார வைத்தது.

குரங்குகள் மத்தியில் இப்போது பலமான முனகல். ஏன், தலைவன் இப்படி மடத்தனமாக நடந்து கொள்கிறான்? அந்தத் தடிக் குரங்கை, வழிகாட்ட வேண்டும் என்பதுபோல் பார்த்தன. இதற்குள் மனித நடமாட்டம் தெரிந்தது. குரங்குக் கூட்டத்தை எங்கேயும் போக வேண்டாமென்று தலைமைக் குரங்கு, தலையாட்டி உத்தரவிட்டு, தனியாகக் கீழே இறங்கியது. பத்து நிமிடத்தில் ஒரு சீப்பு வாழைப் பழங்களுடன் வந்தது. எல்லாக் குரங்குகளும் மொய்க்கத் தொடங்கியபோது, தலைமை, பழங்களைக் குட்டிகளிடம் கொடுத்தது. மீண்டும் தனியாகப் போய், தோசைகளுடன் வந்தது. சக குரங்குகளிடம் கொடுத்தது. தன்னுடன் வர யத்தனித்த தடிக் குரங்கையும், இதர குரங்குகளையும் வரவேண்டாம் என்பது போல் தலையை ஆட்டிவிட்டுப் போனது. தலைவன், அங்கே ஏதோ ஒரு தோப்புக்குள், நன்றாகத் தின்று விட்டு, எஞ்சியதைக் கொண்டு வருவதாகவும், தாங்கள் அங்கே போய் வயிறாரத் தின்னக் கூடாது என்று தங்களைத் தடுப்பதாகவும், தடிக் குரங்கு இதர குரங்குகளுக்கு முகபாவனையால் விளக்கியபோது, எல்லாக் குரங்குகளும் தலையாட்டின. சில, கோபத்தால் உதடுகளைப் பிதுக்கின.

இதற்குள் காலை நொண்டிக் கொண்டே தலைமைக் குரங்கு ஒரு தேங்காயுடன் வந்தது. கெளவிய தேங்காயைக் குரங்குக் கூட்டத்துக்கு முன்னால் போட்டு விட்டு, வலி தாங்கமுடியாமல் அது