பக்கம்:ஒரு சத்தியத்தின் அழுகை.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பதிப்புரை

 பதிப்புச்செம்மல் முனைவர் ச. மெய்யப்பன்

இலக்கிய நூல்கள் பல வெளியிட்டுச் சிறந்து விளங்கும் மணிவாசகர் பதிப்பகம், புகழ்பெற்ற எழுத்தாளர்களின் புதினம், சிறுகதை ஆகியவற்றையும் வெளியிட்டிருக்கிறது. நண்பர் சு.சமுத்திரம் அவர்களின் ஏழு புதினங்களையும், நான்கு சிறுகதைத் தொகுதிகளையும் இதுவரை பதிப்பகம் வெளியிட்டிருப்பதில் பெருமை கொள்கிறது. அந்த நான்கு சிறுகதைத் தொகுதிகளில் ஒன்றான 'ஒரு சத்தியத்தின் அழுகை' இரண்டாம் பதிப்பு, பதிப்பகத்தின் வெள்ளி விழா ஆண்டில் வெளி வருவது மகிழ்ச்சிக்குரிய ஒன்று.

சிந்தனையாளர் சமுத்திரம் அவர்கள் அண்மைக் காலத்தில் புகழ் பெற்றுவரும் எழுத்தாளர். அவர் கதைகள் வெறும் பொழுதுபோக்குக் கதைகள் அல்ல. இவருடைய பல கதைகள் "ஆண்டின் சிறந்த கதை" எனத் தேர்ந்தெடுக்கப் பெற்றுள்ளன. "திறமையான புலமையெனில் பிற நாட்டார் அதை வனக்கம் செய்திடல் வேண்டும்" என்ற பாரதியின் கருத்துக்கேற்ப இவரது பல கதைகள் பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பெற்ற சிறப்பினை உடையன.

தலைசிறந்த கதைகளைப் படைத்துவரும் சமுத்திரத்திற்கு ஒளிமயமான எதிர்காலம் உண்டு. பெயருக்கேற்ப சமுத்திரத்தின் கதைகள் ஆழம் காண முடியாத அழகினை உடையவை. தமிழுக்கு இவர் கதைகள் ஒரு சமுத்திரம்-கதைக் கடல்.

கதையினை வெளியிட வாய்ப்பளித்த ஆசிரியர் அவர்களுக்கும், நல்ல நூல்களை வாங்கி ஆதரிக்கும் வாசகர்களுக்கும் நன்றி.