பக்கம்:ஒரு சத்தியத்தின் அழுகை.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 ஒரு சத்தியத்தின் அழுகை

"அப்புறம் வா" என்று அதட்டலோடு சொன்னார். டாக்டர், மிஸ் உமா, மிஸ்டர் வில்ஸன் உள்படச் சீமான்களும் சீமாட்டிகளும் தலைவருடன் நின்று போட்டோ எடுத்துக்கொண்டார்கள். பின்னர் மிஸ் உமாவும், தலைவரும் சேர்ந்து ஒரு போஸ்; பலப்பல போஸ்களில் பல போட்டோக்கள். இவை முடிந்ததும், தலைவர் கைகூப்பியபடி தம் காரில் ஏறினார். அவரைத் தொடர்ந்து, ஜோடி ஜோடியாகவும், தனித் தனியாகவும், பலர் தம் தம் கார்களில் ஏறினார்கள். தலைவருக்குச் சென்னையில் சங்கத்தின் சார்பில் விருந்தாம்.

கார்கள் பறந்தன. பொன்னாத்தா, அந்தக் கார்கள் தன்மேல் மோதாமல் இருப்பதற்காக ஒதுங்கிக்கொண்டாள். எல்லாரும் போய்விட்டார்கள். பொன்னாத்தா பொறி கலங்கி நின்றாள். மருந்துக்கு எங்கே போவது? ஒன்றும் புரியாமல் அவள் குழம்பி நிற்கையில், பஞ்சாயத்து உறுப்பினர் பரமசிவம் வந்தார். சங்கத்துக்காரர்கள் மத்தியில் சிறுமைப்பட்டதுபோல் எண்ணித் தவித்தவர் இப்போது, பொன்னாத்தாவைப் பார்த்ததும், தம் மதிப்பு உயர்ந்து விட்டதுபோல் நெஞ்சை நிமிர்த்தினார்.

"மாமா, மருந்து தராமல் போயிட்டாங்களே?" "பொறுத்தார் பூமியாள்வார். ஏன் பறக்கறே? நாளைக்கு வருவாங்க."

நாளை வந்தது. நாளைக்கு மறுநாளும் வந்தது. அவர்கள் வரவில்லை.

இதற்கிடையில் பொன்னாத்தாவின் மகன், சாக்லேட் டின்னைக் காலி செய்தான். ஆனால், வயிற்றில் இருந்து தின்றது காலியாகாமல், கையைக் காலை இழுத்துக் கொண்டு கிடந்தான். ஜூரம் 102 டிகிரி தாண்டியிருக்கும். கண்கள், உள்நோக்கிப் போய்க் கொண்டிருந்தன. கை கால்கள் வெட்டிக் கொண்டிருந்தன. வயிறு, கல்மாதிரி கனத்திருந்தது. பொன்னாத்தாவால் நான் பெத்த மவனே என்று கதறத்தான் முடிந்ததே தவிர, வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை.

அக்கம்பக்கத்துக்காரர்கள் கூடிவிட்டார்கள். "ஐயோ, வீடு தேடிவந்த வைத்தியரை விரட்டி நானே என் பிள்ளைக்கு எமனாயிட்டேனே!! என்று பொன்னாத்தா புலம்பிக் கொண்டிருந்தாள்.

அரைமணி நேரம் ஆகியிருக்கும்.