பக்கம்:ஒரு சத்தியத்தின் அழுகை.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒரு சத்தியத்தின் அழுகை


சிட்டாம்பட்டியில் சகல மனித ஜீவராசிகளும் கலந்து கொள்ளும் கலகநாடி அம்மன் திருவிழா துவங்கப்போகிறது என்பதை, அங்கே வரும் வெளியூர்க்காரர்கள், உள்ளுர்க்காரர்கள் சொல்லாமலே தெரிந்து கொள்ளலாம். அம்மன் கோவில் முன்பு சப்பரம் (தேர்) நுழையும் உயரத்துக்குச் சரிந்து குவிந்த பந்தல் போடப்பட்டு, பந்தலில் ஜரிகைத் துணிகள், உள்புறத்தில் கட்டப்பட்டுக் கொண்டிருந்தன.

இந்தக் கோலாகலங்களை ரசித்துக் கொண்டே ராமசாமித் தேவரும், மாயாண்டி நாடாரும் கோவிலுக்குச் சற்றுத் தள்ளியிருந்த பூவரசு மரத்துணில் சாய்ந்து கொண்டே சுவாரஸ்யமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். இருவருக்கும் முப்பத்தைந்து வயது இருக்கலாம்.

தேவர், நாடாரிடம் சிலம்பாட்டத்துல. ஒரு வீச்சு... ஒரு குத்துன்னு மாறிமாறி வந்தாத்தான்... எதிரி அடங்குவான் என்று சொல்லிக் கொண்டிருந்தபோது, ஒரு டீக்கடையிலிருந்து மொத்தமாக வந்த நான்கைந்து சர்வ ஜாதித் தலைவர்களில் நாடார் தலைவர் பெரியசாமி நாடார் 'உங்க வீறாப்புல்லாம்... இங்கதான்... காலனிக்காரப் பசங்க கிட்டே பலிக்காது" என்றார். உடனே இருவரும் பேசுவதற்கிருந்த இடைவெளியில், தேவர் தலைவர் சின்னசாமித் தேவர் புகுந்து விளக்கினார்.

"பின்ன என்னப்பா... உங்க இரண்டு பேரோட வீரம்... பட்டிதொட்டிப் பதினாலுக்கும் தெரியும். நீங்க... ஆடாத சிலம்பா அடிக்காத ஆளா? அப்படியிருந்தும் இந்தக் காலனிக்காரப் பயலுவ... திருவிழாவ நடத்தவிட மாட்டோமுன்னு சொன்னா... உங்கள... பொம்பளையா நினைக்கறாங்கன்னுதான் அர்த்தம்" என்றார்.

"தேவர் சொன்னதை. கவனிச்சிங்களாப்பா... இந்த ஹரிஜனப் பயலுவளும் நம்ம கோயில் உற்சவத்துல கலந்துக்குவாங்களாம். அவங்க கோயிலுக்கும் சப்பரம் போகணுமாம். இல்லேன்னா...

"இல்லேன்னா... என்னவாம்? என்றார் மாயாண்டி நாடார். "இல்லேன்னா... ஒங்க பெண்டு பிள்ளைக... கழுத்துல தாலி இருக்காதுன்னு சொல்றானுக."

"அது மட்டுமா?... நம்மள மட்டந்தட்டுறதுக்காகவே, சப்பரத்தை மறிக்கப் போறாங்களாம்... போலீஸ்ல சொல்லலாமுன்னு நாடார் சொல்றார்" என்றார் உள்ளூர் பிள்ளைவாள்.