பக்கம்:ஒரு சத்தியத்தின் அழுகை.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நியாயம் 69

ஐயாசாமி இதற்குமேல் பேசுவதில் அர்த்தமில்லை என்பதைப் புரிந்துகொண்டு ஒன்றும் பேசவில்லை. சிறிது நேரத்தில் புறப்பட்டு விட்டார்.

அன்னக்கிளியைக் கிண்டல் செய்ததாகக் கூறப்படும் பெருமாள், மாடக்கண்ணுக்கு அத்தை மகன். ஒரளவு வசதியுள்ள குடும்பத்தைச் சேர்ந்தவன். நொடித்துப் போயிருந்த மாடக்கண்ணுவின் குடும்பத்தை அவர்கள் உதாசீனப் படுத்தினார்கள். குடும்பத்தின் மூத்த மகனான மாடக்கண்ணு, வாலிபனானதும் சென்னைக்கு வந்து, வண்ணாரப்பேட்டையில் ஒரு மளிகைக் கடையில் சேர்ந்தான். எப்படியோ விரைவில் சொந்தமாகக் கடை வைத்தான். இரண்டு ஆண்டுகளில் ஊரில், ஐந்து ஏக்கர் நஞ்சை நிலத்தை வாங்கி விட்டான்.

சொந்தமாக வீடு கட்டிவிட்டான். இதுவரை பாராமுகமாய் இருந்த அத்தைக் காரி பெண் கொடுக்க முன்வந்தாள். ஆனால், மாடக் கண்ணுவின் அம்மாவுக்கு விருப்பம் இல்லை. மாடக்கண்ணுவின் தம்பி செல்லத்துரையும், அத்தை வீட்டில் பெண் எடுப்பது பெரும்பாவம் என்று வாதாடினான். அத்தைக்காரி கொதித்தெழுந்தாள். அன்றிலிருந்து ஒரே சண்டை. வரப்புத் தகராறு வந்தது; வாய்த் தகராறு வந்தது. கடைசியில் இரண்டு குடும்பங்களும் ஜென்மப் பகை ஆயின.

இந்தச் சமயத்தில் இப்படிப்படட கடிதத்தைப் பார்த்த மாடக்கண்ணு, தன் தன்மானத்திற்குச் சவால் விடப்பட்டிருப்பதாகக் கருதினான். வழக்கமாக, போர்ட்டருக்கு ஒரு ரூபாய் கொடுத்து, இடம் பிடிக்கும் அவன், எமர்ஜன்ஸியை முன்னிட்டு, முன்னதாகவே டிக்கெட் ரிசர்வ் செய்தான். இதற்கிடையே, தான் வந்து இரண்டில் ஒன்றைப் பார்த்துப் போவதாகவும், தங்கையைக் கிண்டல் செய்து தடியனின் பல்லை உடைக்கப் போவதாகவும், அது வரை தைரியமாக இருக்கும்படியும் அம்மாவுக்குக் கடிதம் போட்டான்.

மாடக்கண்ணு ஒரு டிரங்க்' பெட்டியில் துணிமணிகளை எடுத்து வைத்தான். பட்டணத்துக்காரன் என்பதைக் கிராமத்தில் காட்டும் தோரணையில் புல்பாண்ட் போட்டு ஒரு சட்டையை இன் செய்து கொண்டான். கூலிங் கிளாஸ் மாட்டிக்கொண்டான். ஐயாசாமியும், ஊரில் இருக்கும் மனைவிக்குச் சேதி சொல்லி அனுப்ப வந்திருந்தார். அவன் புறப்படுகிற அந்தச் சமயத்தில் ஒரு கடிதம் வந்தது. மாடக்கண்ணு, அவசர அவசரமாகப் பிரித்து, உரக்கப் படித்தான்.