பக்கம்:ஒரு சத்தியத்தின் அழுகை.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 ஒரு சத்தியத்தின் அழுகை

"நான் சொல்றத நல்லா கேளுடா. உன் குடும்பத்துக்கும்... உன்னோட அத்தை குடும்பத்துக்கும் ஜென்ம விரோதம் வாரதுக்கு அடிப்படைக் காரணமே பாசந்தான். அன்னக்கிளியை நீ கட்டிக்கணுங்கற அன்பு நிறைவேறாமல் போச்சி. அந்த அன்பை, அத்தைக்காரி பகையாய் மாத்திட்டாள். இது இயற்கைதான். உன் மேல. உசிர வைச்சிருக்கிற உன் அத்தை மவ அன்னக்கிளி, உன் தம்பி செல்லத்துரையைப் பார்த்ததும், இவன்தான் நம்ம அத்தானோட சேரவிடாமல் தடுத்திட்டான் என்கிற ஆத்திரத்துல, "உன் அண்னன் கிடைக்காமல் போனதால், நான் வாழாம போகப் போறதில்ல' என்பதைக் காட்டிக்கிற மாதிரி பவுசு செய்திருப்பாள். இதை, செல்லத்துரையும் பாசத்தால கண்டிக்கப் போயிருப்பான். விவகாரம் இதுதான். இப்போ. நீ கூட அதிகமா கோபப்படுறதுக்கும் காரணமிருக்கு."

என்ன காரணம் மாமா?"

"நீயும் உன் அத்தை மகள விரும்புற. நாம உயிர வச்சிக்கிட்டு இருக்கிற அன்னக்கிளியா அடக்கமில்லாமல் நடந்துகிட்டா என்கிற ஆத்திரத்துலதான் கோபப்படுற. தம்பியை திட்டினதுக்காக இல்ல... மூளையையும் மனசையும் ஒண்னுக்கு ஒண்னு அடிமையாய் வச்சாத்தான், நியாயத்த நியாயமாய் பார்க்கமுடியும்..."

மாடக்கண்ணு பெட்டியை ஒர் ஒரமாகத் தள்ளிவிட்டு, கடைக்காரப் பையனைப் பார்த்து, "டிக்கெட்ட கேன்ஸல் பண்ணிட்டு வாடா!" என்றான்.

ஐயாசாமி குறுக்கிட்டு, “புறப்பட்ட பயணத்தை நிறுத்தாதடா... அத்தை பொண்ணு கழுத்திலே மூணு முடிச்சி போட்டு அந்தப் பய மவளையும் கூட்டிக்கிட்டு வா. நாளைக்கு நானும் ஊருக்கு வாரேன். நீ அவள் கையை பலவந்தமாய் இழுக்கிறதுக்கு அவசியமில்லாம பண்ணிடுறேன். பய மவள், புண்னாக்கை மாடு பாக்கறது மாதிரி, உன்னை ஆசையோடு பார்ப்பாள்!"

- ஐயாசாமி, வாய் குலுங்கச் சிரித்தார். நானந்தோய்ந்த புன்னகையைப் படரவிட்டுக் கொண்டே, மாடக்கண்ணு ஊருக்குப் புறப்பட்டான்.