பக்கம்:ஒரு சத்தியத்தின் அழுகை.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு "துரோகியின் விசுவாசம்

அக்காலத்தில், மயானமாகவும், இக்காலத்தில் மண்டிக்கிடக்கும் குடிசைகளாகவும் காட்சியளிக்கும் அந்த பகுதியில், எலி வளையம்போல் அமைந்த சந்து பொந்துகளில் நடந்து, தேங்கிக்கிடக்கும் நீர்ப் பகுதிகளுக்குள் தேனிலவு நடத்தும் கொசுக்கள் கண்களில் மொய்க்காமல் இருக்க, கண்ணில் விரல் விட்டு ஆட்டிக் கொண்டு, ஆங்காங்கே கோலி விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களை, செல்லமாக காதுகளைப் பிடித்து திருகிக்கொண்டும், குடித்து விட்டுப் புரளும் ஒருவனை வெறுப்பாகப் பார்த்துக் கொண்டும், செல்லம்மா வெளிப்பட்டாள்.

மெயின் ரோட்டிற்கு வந்தபோது, ரோட்டின் முனையில் இருந்த எரியாத மின்சார விளக்குக் கம்பத்தைப் பிடித்துக் கொண்டு, லேசாக முதுகைச் சாத்திக்கொண்டிருந்த அந்தக் கிழவியைப் பார்த்ததும், செல்லம்மா, கோபம்மாவானாள். அன்பாக, இயல்பாக வந்த ஏதோ ஒரு வார்த்தையை உருக்குலைத்துவிட்டு, உருக்குலைந்து நின்ற அந்தக் கிழவியை முறைத்துக்கொண்டு நின்றாள்.

லேசாக முதுகை வளைத்துக்கொண்டும், வலது கையை மார்போடு சேர்த்து கூம்பு மாதிரி மேல் நோக்கி வளைத்துக் கொண்டும், உள்ளங்கையை கிண்ணம்போல் குவித்துக் கொண்டும், அதில் அம்மைத் தழும்புகள் கொடுத்த அழுத்தமான முகத்தை அழுந்திக்கொண்டும் நின்ற கிழவி செல்லம்மாவின் போர்க்கண்கள் தொடுத்த கோப அம்புகளைத் தாங்கமாட்டாதவள்போல் உடம்பைத் திருப்பிக் கொண்டு புறமுதுகு காட்டிக்கொண்டு நின்றாள். ஆயாவுக்கு வயது ஐம்பதைத் தாண்டிவிட்டது என்பதை, அவள் உடம்பை விட்டுத் தாண்டப் போவது போல், லூலாக இருந்த அவள் கைகளும், கால்களும் காட்டாமல் காட்டின. அவள் ஒரு காலத்தில் இளம் பெண்ணாக இருந்தபோது, மேனி மதமதப்பாக இருந்திருக்க வேண்டும் என்பதற்கு நினைவுக்கல்போல், அவள் மார்பும், வயிறும், கல்மாதிரி கொஞ்சம் அழுத்தமாகவே இருந்தன. கால்களையும் கைகளையும், முகத்தையும் விலக்கிவிட்டுப் பார்த்தால், அவளை இப்போதும் நடுத்தரவயதுப் பெண் என்று கண்மங்கலானவர்கள் சொல்லலாம்.