உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஒரு சத்தியத்தின் அழுகை.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒரு “துரோகியின்” விசுவாசம்

75


செல்லம்மா இப்போது ஒரு வாலிபனுடன் திரும்பிக் கொண்டிருந்தாள். அவள் இடுப்பை தற்செயலாகத் தொடுவதுபோல் தொட்ட அவனை “இன்னாய்யா... ஒன் மனசில... நெனப்பு” என்று சீரியஸாகச் சொல்லாமல், சிணுங்கியவண்ணம் சொல்லிக்கொண்டு வந்த செல்லம்மாவையும், கவர்ச்சியான கறுப்பு நிற மேனியில், கட்டம் போட்ட லுங்கியும் பொம்மை போட்ட சொக்காவும் அலங்கரிக்க, அலங்காரமாக வந்த அந்த வாலிபனையும் பார்த்து, கிழவி திருப்திப் பட்டுக்கொண்டாள். அவன் கண்களை அங்குமிங்கும் படரவிடாமல், நேராகப் பார்த்துக்கொண்டு வந்ததில், கிழவிக்கு படுதிருப்தி. அவர்கள் நெருங்க நெருங்க, கிழவி இருப்புக்கொள்ளாமல், மின்சாரக் கம்பத்தில் முதுகைத் தேய்த்துக்கொண்டு நின்றாள். அவர்கள் கிட்ட வந்ததும், மீண்டும் உடம்பைத் திருப்பிக் கொண்டாள்.

செல்லம்மாவுக்கு இன்னும் கோபம் தீரவில்லை போலும். ‘சடன்’ பிரேக் போட்ட பல்லவனைப்போல், முன்னால் குவிந்து, பின்னால் வளைந்து உடம்பை குலுக்கி விட்டுக் கொண்டு நின்றாள். “போஸ்ட்ல நிக்காதேமே, ஷாக் அடிச்சிடும்” என்று சொல்லப் போனவள், அப்படிச் சொல்ல நினைத்ததற்காக தன்மீதே கோபப்பட்டுக் கொண்டு, பின்பு அந்தக் கோபத்தை, கிழவியின்மேல் திசை திருப்பிவிட்டாள்.

“ஏம்மே... இன்னும் நிக்கறே? படா... பேஜாரா பூட்டே... நானுந்தான் கேக்குறேன்... நீல்லாம் எதுக்காவேமே... புடவகட்டுற? தேவுண்டாவது ஈனமானம் வாண்டாம்?”

கிழவி, தன் புடவையை இழுத்துவிட்டுக் கொண்டே, அவளைப் பரிதாபமாகப் பார்த்தாள். செல்லம்மா இப்போதைக்கு நகரமாட்டாள் என்பதைப் புரிந்து கொண்டவன் போல், அந்த வாலிபன் சிறிது நடந்து சென்று, ஒரு பக்கமாக கேட்கும் தூரத்தில் நின்றுகொண்டு, தம் பிடிப்பவன் போல், தம்மடித்துக்கொண்டு நின்றான். அவன் பிரிவாற்றாமையை தாங்க முடியாதவள்போல், செல்லம்மா, அவசர அவசரமாக, மடமடவென்று கொட்டினாள்.

“நானு இங்கே... ரீஸண்டாகிறது ஒன்கு உறுத்துதாமே? ஒன்னால்... அப்பதான் சொகமில்ல... இப்பவும் சொகத்த கெடுக்க நெனச்சா... இன்னா அர்த்தம்? தயவு செஞ்சி... போயிடுமே... அட வுன்னதான்... நீயா பூடுறியா – நானா... கழுத்தப் பிடிச்சி தள்ளணுமா?”

கிழவி, தன் கழுத்தில் இரண்டு கைகளையும் கேடயம் போல் வைத்துக்கொண்டாள். இப்போது அவளாலும், பேசாமல் இருக்க முடியவில்லை.