பக்கம்:ஒரு சத்தியத்தின் அழுகை.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 ஒரு சத்தியத்தின் அழுகை

அவன் சீக்கிரமாய் எழுந்தான். நடந்து போனவனை அவள் பேச்சால் இழுத்தாள்.

"நான் குடுத்தேன்னு சொல்லிடாத. அதுக்கு குளிரு விட்டுடும். நீயே பரிதாபப்பட்டு குடுக்கதா சொல்லு. ஒன்ன பாக்கிறதுக்கும் அதுக்கு சான்ஸ். நீ எவ்வளவு நல்லபிள்ளன்னு ஆத்தாவுக்கு தெரியட்டும். போய்யா, குயிக்கா போய்யா. இந்நேரம் அது தங்கச்சால அண்ட போயிருக்கும்."

அப்படியும் இப்படியுமாக ஒரு மாதம் ஒடியது.

செல்லம்மாவுக்கும், அந்த வாலிபனுக்கும் வடசென்னையில் உள்ள அந்த குடிசைப் பகுதியில் மேளதாளத்துடன் ஒரு வஸ்தாது வாத்தியார் தலைமையில் கல்யாணம் நல்லபடியாக நடந்தேறியது. திருமண நாளில் ஆத்தாக்காரி வந்திருக்கிறாளா என்று செல்லம்மா, அங்குமிங்குமாக கண்ணைச் சுழற்றினாள். ஆத்தா அகப்படவில்லை. அந்த இன்ப நேரத்திலும், அவள் கண்கள் துன்பநீரைக் கொட்டின. தாலி கட்டப்பட்ட அரை மணி நேரத்திற்குப் பிறகு, செல்லம்மா ரோட்டுப் பக்கம் வந்தாள். ஆத்தாக்காரி கிட்டவில்லை. மின்சாரக் கம்பத்தையே வெறித்துப் பார்த்துவிட்டுப் போனாள் செல்லம்மா. ஆத்தாவைக் கண்டுபிடிக்க முடியாமல், திரும்பி வந்த அவளுக்கு, காசை நீட்டிய நேரத்திலிருந்து மனசில் ஒரு பள்ளம் விழுந்தது. அதை நிரப்ப, ஆத்தாவும் அதற்குப் பின் வரவில்லை.

ஓராண்டு காலம் ஓடியது.

இரண்டு குடிசைகள் ஒன்றாவது போல், இன்னொன்றும் உருவாகியது. செல்லம்மா பிரசவ ஆஸ்பத்திரியில் ஏதோ ஒரு வார்டில் தரையில் உள்ள பாயில் புரண்டாள். சுகப் பிரசவம், ஆயாவையே உறித்து வைத்தது போன்ற அழகான பெண் குழந்தை.

யாரும் வராத சமயம். செல்லம்மா, குழந்தையின் கன்னத்தை நீவிவிட்டுக் கொண்டிருந்தாள். ஒரு தாயின் மனம் எப்படியிருக்கும் என்பதை அனுபவரீதியாக பார்த்த அவளுக்கு ஆத்தாக்காரி மீது, பாசம் ஏற்பட்டது. அதே சமயம், இப்படிப்பட்ட பாசத்தையும், காமவெறியால் எப்படி உடைக்க முடியும் என்று அவள் யோசிக்க யோசிக்க, ஆத்தாமீது கோபமும் ஏற்பட்டது.

கோபமான அனுதாபத்துடனும், அனுதாபமான கோபத்துடனும் அவள் தலையணையில் தலையை வைத்து, அதை அங்குமிங்குமாக ஆட்டிக்கொண்டிருந்த சமயத்தில்

ஆஸ்பத்திரி ஆயா, நமது ஆயாவை இழுத்துக்கொண்டு உள்ளே வந்தாள்.