பக்கம்:ஒரு சத்தியத்தின் அழுகை.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 ஒரு சத்தியத்தின் அழுகை

இருக்காமுல்லா. அவன்... என்னை என்ன பண்ணினான் தெரியுமா..." என்று சொல்லி, ஊரைக் கூட்டி ஒப்பாரி வைக்க வேண்டும் போலிருந்தது.

மங்கம்மா பேசாமல் பிரிந்த உதடுகளை, கட்டாயமாகச் சேர்த்துக் கொண்டாள். கொட்டப் போன கண்ணிரைப் புல் கத்தைகளை வைத்து, லாவகமாகத் தேய்த்து விட்டுக் கொண்டாள். எதுவும் பேசாமல் மடமடவென்று நடந்தாள்.

போலீஸ் அவுட் டோஸ்டு மாதிரி, எந்தவித பந்தாவும் இல்லாமல் அனாதை மாதிரி இருந்த தன் ஒலை வீட்டின் முற்றத்தில், புல்லுக்கட்டை, புருஷன் இறக்கி விடுவது வரைக்கும், சுமந்து கொண்டு நிற்பவள், அன்று அதைப் பொத்தென்று தரையில் போட்டாள். திருநெல்வேலிக்கு விறகு வண்டியுடன் போய், வெறும் வண்டியுடன் திரும்பியிருந்த நடராஜன், நாலுநாட்கள் தூக்கக் கலக்கத்தை ஒரு மணி நேரத்தில் தீர்த்துக் கட்டி விடுவதுபோல் குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருந்தவன், சத்தம் கேட்டு, கெட்ட கனவு கண்டவன்போல் திடுக்கிட்டு எழுந்தான். கண்களை, உள்ளங் கைகளால் தேய்த்து விட்டுக் கொண்டே, "நான்தான் வாரது தெரியுமே இன்னைக்கு. ஏம் புள்ள புல்லு வெட்டப் போனே' என்று சொல்லிக்கொண்டே கைகளை மேலே துக்கி, ஒடித்து விட்டு, அவளை ஆசையோடு பார்த்தான். மாட்டுக்கொம்பில் போட்ட மணி மாதிரி ஒலிக்கும் அந்தக் குரல், "இந்த் நாலு நாளுல ஒரு நாளாவது என்னை நினைச்சாரா? கையில் அடிச்சிச் சொல்லும். அப்பதான் எல்லாம்" என்று வழக்கமாகச் சொல்லாமல் போனதில் சற்று ஏமாற்றமடைந்தாலும், அந்த ஏமாற்றம், அவன், அவளின் கவர்ச்சி முகத்தையும், சீனியரைக்காய் நிறத்தையும், உருளை மாதிரி உருண்டு திரண்டிருந்த அவயவங்களையும் ரசிப்பதைத் தடுக்கவில்லை.

மங்கம்மா, புருஷனையே சிறிதுநேரம் கண்கொட்டாமல் பார்த்தாள். கண்கொட்டவில்லையானால், நீர் கொட்டியது. உதட்டில் படிந்த உப்புநீரைத் துடைப்பதற்காக, கையைத் துக்கியவளால் தாள முடியவில்லை. கணவன் சாப்பிட்ட பிறகு, ஆற அமர நிதானமாகச் சொல்லவேண்டும் என்று நினைத்தவளால், தன்னைக் கட்டுப்படுத்த முடியவில்லை. நார் கட்டிலில் இருந்து எழுந்திருக்கப்போனவனின் கால்களைப் பிடித்துக்கொண்டு, விம்மினாள். நடராஜன் பதறிப்போனான். அவள் முகத்தை நிமிர்த்தி, "என்ன பிள்ள என்ன நடந்தது. சொல்லு, சொல்லு" என்று சொல்லிவிட்டு, பிறகு அவள் எதுவும் சொல்லாமல் இருந்ததைப் பார்த்து, "சொல்லுமா என்று கொஞ்சம் அதட்டினான். மங்கம்மா, பேசப் போனாள். மீண்டும் அழுதாள்.