பக்கம்:ஒரு சத்தியத்தின் அழுகை.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 ஒரு சத்தியத்தின் அழுகை

பண்ணியிருந்தா ஊர்க்காரன்கள் சும்மா இருப்பானா? இல்லாதவன் பக்கம் நியாயம் இருந்தாலும் அதுவும் அநியாயமா மாறிவிடுமா? எதையாவது பண்ணாட்டா நாம இந்த ஊர்ல மானத்தோட இருக்கமுடியாது. ஊர்க்காரன் இளக்காரமால்லா என்னை பார்க்கான். எதையாவது பண்ணனும். ஆள் பலமோ, பண பலமோ இல்லாத நான், அது எல்லாம் இருக்கிற மாசானத்த என்ன பண்ணமுடியும்? எதையாவது பண்ணனும். என்ன பண்ணலாம்? இல்லன்னா, இந்த ஊர்ல குடியிருக்க முடியாது. இத இப்படியே விட்டால் இனிமே வீட்டுக் கதவக் கூடத் தட்டுவாங்க!

நடராஜன் எளியவனாக இருந்தாலும், அந்த எளிமையையே பெருமையாகக் கருதும் முரடன் என்பதைத் தெரிந்து, அவன் கண்களில் படாமல் திரிந்த மாசானம், இப்போது காளியம்மன் கோவில் முன்னால் அட்டகாசமாக உட்கார்ந்திருந்தான். ஆறுன சோறு, பழய சோறு என்பது அவன் நெனப்பு. கோவிலுக்குப் பின் பக்கம் உள்ள ரோட்டில் நடந்து கொண்டிருந்த நடராஜனுக்கு "மாசானம்! நீ பெரிய ஆளுடா மங்கம்மாவ எப்டிடா பிடிச்ச? மயக்கிப் பிடிச்சியா, இல்லை, பிடிச்சி மயக்கினியா" என்று ஒருவன் கேட்பதும், அதற்கு, ரெண்டுந்தான்' என்று மாசானம் சிரித்துக் கொண்டே பதில் சொல்வதும் நன்றாகக் கேட்டது.

அவ்வளவுதான் நடராஜனுக்குத் தெரியும். வெறி பிடித்தவன் போல் மாசானத்தில் முடியைப் பிடித்து மல்லாக்கக் கிடத்தினான். அவன் இடுப்பில் இருந்த கத்தி, மாசானத்தின் மார்பில் பாய்ந்து, கம்பர் சொன்னது போல், அவன் 'மங்கம்மா ஆசையை அறவே அறுத்துவிட்ட திருப்தியில், அசையாமல் இருந்தது.

"கையைத் தொடும்போது சும்மா இருந்தாத்தான் தோள தொடச் சொல்லும்" என்று முன்பு இடக்காகப் பேசிய அதே போலீஸ் பாராக்காரர்கள், நடராஜன் கைகளில் பயபக்தியுடன் விலங்கிட்டு, அவனை இழுத்துக் கொண்டு போனார்கள்.

'தர்மம் தன்னைக் காக்க, அதர்ம வேடம் போட்டிருப்பது போல், நடராஜன், அவர்களுக்கு மத்தியில் கம்பீரமாக நடந்தான்.

ஒரு கொலை விழுவதற்குக் காரணமான இசக்கிமுத்து, மணியக்கார வகையறாக்கள், "இந்த ஊரு சுத்தமா இருந்தது. இந்தப் பய கொலைய செய்து ஊருக்கே கெட்ட பேரை உண்டாக்கிட்டானே" என்று கெட்டவார்த்தைகளால் திட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஊர்க்காரர்கள் அதற்கு சிங்கி அடிக்கிறார்கள். செய்ய வேண்டியதைச் செய்யாமல் கெடுத்த அவர்களைப் பார்த்துக் காளி சிலை சிரிப்பது போலவும் சினப்பது போலவும் தெரிகிறது.

எப்படியோ, நடராஜன் மட்டும் ஜெயிலில் இருக்கிறான்.