பக்கம்:ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்


6. மகிழ்ச்சிகரமான சூழ்நிலையிலேதான் சிறு விளையாட்டுக்கள் ஆடப்படுகின்றன. அவர்கள் மகிழ்ச்சியாக ஆட வேண்டும் என்பதற்காக, கட்டுப்பாடில்லாத ஒழுங்கற்ற செய்கைகளையும், உரிய விதிகளை மீறி ஆடுகின்ற பண்பற்ற போக்கினையும், ஆடும்போது அனுமதித்து விடவே கூடாது. ஆட்டம் என்பது ஒழுங்கினை வளர்ப்பதற்காகவே ஆடப்படுகிறது என்பதை ஆட்டக்காரர்கள் எப்பொழுதும் எப்பொழுதும் நினைவில் கொள்ளும்படி செய்ய வேண்டும்.

7. ஆட்டக்காரர்கள் ஆர்வத்துடன்தான் ஆட்டத்தில் பங்கு கொள்ள வேண்டும். அவர்கள் சுமையாகக் கருதும்படி விளையாட்டுக்களை அவர்கள் மீது சுமத்தக்கூடாது. கடுமையான ஆட்டமாகவும் மாறிவிடக்கூடாது.

8. விளையாட்டுக்களை நடத்துகின்ற ஆசிரியர்கள் தங்கள் பொறுப்புக்குள்ளிருந்து ஆடுகின்ற குழந்தைகள் அனைவரும் தங்களது சொந்தக் குழந்தைகள் போன்ற நிதர்சன உணர்வுடன், தங்கள் குழந்தைகளுக்கு எவ்வளவு உணர்ச்சிபூர்வமான பாதுகாப்பினை அளிப்போமோ, அந்த நிலையில் இருந்தும் பாதுகாப்புடன் ஆடச் செய்ய வேண்டும்.