பக்கம்:ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்


ஆட்டக்காரர்கள் விரட்டுபவரிடமிருந்து தப்பித்துக் கொள்ள, தங்கள் உடலை முறுக்கியும், வளைந்தும், நெளிந்தும், குனிந்தும், நிமிர்ந்தும் தங்களது நிழலை மிதிக்காத வண்ணம் காத்துக் கொண்டு ஆடினால், ஆட்டம் ஆடுவோருக்கும், காண்போருக்கும் இனிமையானதாக அமைந்திருக்கும். சுவையாகவும் இருக்கும்.

23. குறுக்கோட்டம்

(Cross Tag)

ஆட்ட அமைப்பு: நிழலாட்டம் போல்தான் இருக்கும். ஆனால், விரட்டித் தொடுபவர் ஆட்டக்காரர்களைத் தொடும் தன்மையில்தான் சிறு மாற்றம் உண்டு. அதை இங்கே காண்போம்.

ஆடும் முறை: விரட்டித் தொடுபவர் ஓடி ஒரு ஆட்டக்காரரை விரட்டிக் கொண்டிருக்கும்பொழுது, அவர்கள் இருவருக்கும் இடையே (அதாவது விரட்டுபவருக்கும் விரட்டப்படுபவருக்கும் இடையே) யார் குறுக்கே புகுந்து ஓடுகிறாரோ, அவரைத்தான் விரட்டுபவர் விரட்டித் தொட வேண்டும்.

அவரை உடனே தொட்டுவிட்டால் விரட்டுபவராக அவர் மாறிவிட, ஆட்டம் மீண்டும் தொடரும். இல்லாமல் அவரை விரட்டும்போது வேறு யாராவது அவர்களுக்கு குறுக்கே ஓடினால், இடையே ஓடியவரைத் தான் விரட்ட வேண்டும்.

தொடப்பட்டவர் விரட்டுபவராக மாறிவிடுவார்.