பக்கம்:ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56

ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்


முதலில், எல்லா ஆட்டக்காரர்களையும் அழைத்து ஒரு குறிப்பிட்ட சிலை போன்ற அமைப்பில் (pose) நிற்கச் சொல்ல வேண்டும். (உ. ம்.) கொக்கு நிற்பது போல, காகம் பறப்பது போல, யானை தும்பிக்கையை உயர்த்துவது போல ஏதாவது ஒரு சிலை இருக்கை.)

அவர்கள் செய்து காட்டுவதில் எந்த இருக்கை கஷ்டமானது என்று நாம் கருதுகிறோமோ அந்த ஒன்றையே தேர்ந்தெடுத்து, அனைவரும் அதுபோல்தான் நிற்க வேண்டும் என்று அறிவித்துவிட வேண்டும்.

அந்த ஆட்டக்காரர்களில் ஒருவரை விரட்டித் தொடுபவராகத் (it) தேர்ந்தெடுத்து அவர்கள் நிற்கும் இடத்திலிருந்து 60 அடிதூரத்திற்கு அப்பால் போய் நிற்கச் செய்ய வேண்டும்.

அவரும் அங்கே போய், தன் முதுகுப் புறத்தைக் காட்டிக்கொண்டு அவர்களைப் பார்ப்பதுபோல் நிற்காமல் முன்புறம் திரும்பியவாறே நிற்க வேண்டும். ஆடும் முறை: தூரத்தில் தனியே வந்து நிற்கும் ஆட்டக்காரர் சத்தமாக 1, 2 என்று விட்டுவிட்டு எண்ணத் தொடங்க வேண்டும். அவர் அப்படிச் சத்தமாக எண்ணிக் கொண்டிருக்கும் பொழுதே, ஆட்டக்காரர்கள்.அனைவரும் அவரை நோக்கி முன்னேறி நடந்து செல்ல வேண்டும்.

எண்ணிக் கொண்டிருப்பவர் 10 என்று எண்ணிவிட்டுத் திடீரென்று திரும்பிப் பார்ப்பார். உடனே நடந்து வந்த அனைவரும் தங்களுக்கு முன்னே அறிவித்திருந்த அந்த குறிப்பிட்ட சிலை போன்ற தன்மையில் அசையாமல் நிற்க வேண்டும்.

உடனே சிலைபோல நிற்காதவர்கள், நிற்க முடியாத வர்கள், நின்ற பிறகும் அசைந்து கொண்டிருப்பவர்கள் எல்லாம் ஆட்டமிழந்து விடுகின்றார்கள் (out).