பக்கம்:ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

93


ஓடத் தொடங்கும் கோட்டில்தான் ஆட்டம் முடிவடைகிறது. குழுவின் கடைசி இரட்டையர்களின் எந்தக் குழு இரட்டையர் முதலில் ஓடி வந்து முடிக்கிறார்களோ அக்குழுவே வென்றதாகும்.

குறிப்பு: எக்காரணத்தை முன்னிட்டும் இரட்டையர்கள் கம்பின் பிடியை விட்டுவிடாமல், பிடித்தபடிதான் ஓட வேண்டும்.

குழுவிலுள்ள எல்லோரும் கம்பினைத் தாண்டிக் குதித்திட வேண்டும். பக்கவாட்டில் எடுத்துச் செல்லக் கூடாது. கால்களுக்குக் கீழாகவே கம்பினைக் கொண்டு செல்ல வேண்டும்.

61. வட்டத்தில் வைத்தாடுதல்

(All up Indian club Relay)

ஆட்ட அமைப்பு: ஓடத் தொடங்கும் கோடு ஒன்றைப் போட்டு அதன் பின்னே, நான்கு குழுவாகப் பிரித்த மாணவர்களை (ஒவ்வொரு குழுவையும்) ஒருவர் பின் ஒருவராக நிறுத்தி வைக்க வேண்டும்.

ஒவ்வொரு குழுவின் முன்னதாக, 15 அடி தூரத்தில் ஒரு சிறு வட்டமும் (3 அடி விட்டத்தில்) அதிலிருந்து 10 அடி தூரத்தில் இன்னொரு சிறு வட்டத்தையும் போட்டு வைத்திருக்க வேண்டும்.

குழுவிற்கு முன்பாக உள்ள முதல் வட்டத்தில் 3 இந்தியன் கரளா கட்டைகளை (Indian clubs) நிறுத்தி வைத்திருக்க வேண்டும். இப்பொழுது ஒவ்வொரு குழுவிற்கு நேராக 2 வட்டங்களும், முதல் வட்டத்தில் மூன்று கரளா கட்டைகளும் இருக்கின்றன.