பக்கம்:ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம்-அயோத்திதாசரின் சொல்லாடல்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ப. மருதநாயகம் ✤ 109


புலவர்களுக்கே ஆகும், சுவையற்ற கவி பாடும் ஏனையவருக்கு ஆகாது என்று விளக்கம் அளிப்பார் (அலாய்சியஸ் II 684). பரிமேலழகரோ, “புகழ் உடம்பிற்கு ஆக்கமாகும் கேடும் புகழ் உடம்பு உளதாகும் சாக்காடும் சதுரப்பாடு உடையார்க்கு அல்லதில்லை” என்று உரை வரைந்து

ஆக்கமாகுங் கேடாவது புகழுடம்பு செல்வம் எய்தப் பூதவுடம்பு நல் கூர்தல். உளதாகும் சாக்காடாவது புகழுடம்பு நிற்கப் பூதவுடம்பு இறத்தல். நிலையாதனவற்றான் நிலையின எய்துவார் வித்தகர் ஆதலின் வித்தகர்க்கல்லால் அரிதென்றார் (பரிமேலழகர் 84)

என்று தரும் விளக்கம் அரியது. இதனை ஏன் அயோத்திதாசர் ஏற்க மறுக்கிறார் என்பது புரியாத புதிராகும். ‘நத்தம்’ எனும் சொல் ஆக்கம், இரவு, இருள் எனும் பொருள்களைத் தருமாயினும் பரிமேலழகர் கொள்ளும் பொருளே சிறப்புடையது.

நெருநல் உளன் ஒருவன் இன்றில்லை யென்னும்

பெருமை உடைத்து இவ்வுலகு

எனும் குறளுக்கும் தாசர் அளிக்கும் உரை நம் சிந்தனையைத் தூண்டுவது. ‘பெருமை உடைத்து இவ்வுலகு’ என்ற தொடருக்கு ‘தடித்த யாக்கையை உடைத்தாயுள்ள உலகம்’ என்றும் ‘நெருநல் உளன்’ என்பதற்குத் ‘தன்னை அடுத்துள்ள ஒருவன்’ என்றும் பொருள் கொள்ளும் அவர் “உலகத்தில் தோன்றியுள்ள பெருத்த உடலானது இன்று என்னுடனிருந்தான் கிடந்தான் தன் கேள் அலறச் சென்றான் என்னும் நிலையற்றுள்ளதை நிலையென்று எண்ணிக் காம வெகுளி மயக்கங்களைப் பெருக்கலாகாது” என்று விரிவாக்கம் செய்வார்.

“நிலையாமை” எனும் அதிகாரத்தில் உள்ள

புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்

துச்சில் இருந்த உயிர்க்கு”

எனும் குறளுக்குப் பரிமேலழகர்,

“வாதம் முதலியனவற்றின் இல்லாய உடம்புகளுள் ஒதுக்கிருந்தே போந்த

உயிர்க்கு எஞ்ஞான்றும் இருப்பது ஓர் இல் இதுகாறும் அமைந்ததில்லை போலும்” என்று பதவுரை தந்து,

உயிரோடு எப்பொழுதும் கூடியிருக்கக்கூடிய உடம்பு ஏதுமில்லை” எனும் கருத்தை வலியுறுத்துவதாகக் கொள்வார். ஆனால் அயோத்திதாசர்