பக்கம்:ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம்-அயோத்திதாசரின் சொல்லாடல்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ப. மருதநாயகம் ✤ 111


விலங்கின் உயிரைப் போக்கி அது நின்ற ஊனை உண்ணாமை நன்று” என்று பொருளுரைத்து “அவ்வேள்விகளான் வரும் பயனினும் இவ்விரதத்தான் வரும் பயனே பெரிதாம்” (பரிமேலழகர் 93) என்ற விளக்கத்தையும் சேர்ப்பார். வேள்வி பற்றிய பேச்சையே தவிர்த்து இக்குறளுக்கு அயோத்திதாசர் உரைவரைவார். ‘வேட்டல்’ என்பதைத் ‘திருமணம் செய்தல்’ என்னும் பொருளில் எடுத்துக் கொண்டு,

ஆயிரம் விவாகங்களைச் செய்து நெய் பிசைந்த அன்ன தானம் செய்வோனாயினும் சிறப்படைய மாட்டான். ஓர் உயிரினை வதையாமலும் அதன் புலாலை உண்ணாமலும் உள்ளவன் எவனோ அவனே சிறப்படைவான் (அலாய்சியஸ் II 700)

என்று அவர் கூறுவது கருதத்தக்கது.

கணை கொடிது யாழ்கோடு செவ்விதாங்கு அன்ன

வினைபடு பாலாற் கொளல்

எனும் குறளுக்குப் பரிமேலழகர் “அம்பு வடிவாற் செவ்விதாயினும் செயலாற்கொடிது; யாழ் கோட்டால் வளைந்ததாயினும் செயலால் செவ்விது. அவ்வகையே தவம் செய்வோரையும் கொடியர் செவ்வியர் என்பது வடிவால் கொள்ளாது அவர் செயல் பட்ட கூற்றானே அறிந்து கொள்க” (பரிமேலழகர் 100) என்று விளக்கம் அளிப்பார். தாசரோ

வில் வளையில் துன்பத்தைக் கொடுக்கும், வீணை வளையில் இன்பத்தைக் கொடுக்கும். அது போல் துறவிகளது செயல்களால் உண்டாகும் பயனை நல்வினை தீவினை யென்னும் இரு பகுப்பால் தெரிந்து கொள்ள வேண்டும்.

என்றும்

துறவியானவன் வில்லைப்போன்று வளைந்து ஒடுங்கின வனாகக்காட்டித் துன்பத்தைச் செய்தலும் வீணையைப் போன்று வளைந்து ஒடுங்கினின்று இன்பத்தைத் தருதலுமாயது கொண்டு துறந்துந் தீவினையை அகற்றாது துக்க விருத்தி அடைதலையும் துறந்து நல்வினையைப் பெருக்கிச் சுவிருத்தி அடைதலுமாய இருவகுப்பாலும் கண்டு கொள்ளலாம். (அலாய்சியஸ் II 108)

என்றும் விளக்குவார்.

மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்

பழித்தது ஒழித்து விடின்

எனும் குறளுக்குத் “துறவு பூண்டும் உலக மக்களால் மரணம் அடைந்தானென இழிவு கூறலை நீக்கிக் கொள்ளுவானாயின்