பக்கம்:ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம்-அயோத்திதாசரின் சொல்லாடல்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

114 ✤ ஒரு பூர்வ பெளத்தனின் சாட்சியம்

மோகம் குறைந்து பேராசை குறைந்து விவேகம் நிறைந்திருப்பவன் யாரோ அவனையே மேலோன் என்றும் பெரியோன் என்றும் கூறத்தகும். இதனினும் வஞ்சகம், பொறாமை, பொருளாசை, குடிகெடுப்பு, கட்கொலை, காமம், சோம்பல், மிகுந்த குடும்பத்தோரைக்கீழ் மக்களென்றும் சாந்தம் ஈகை அன்பு விடாமுயற்சி உழைப்புமிகுந்தோரை மேன்மக்களென்றும் கூறுவது நீதிநூல் துணிபாம் (அலாய்சியஸ் II 757).

பெளத்த நீதி நூல்களில் ‘பெரியோர்’ என்றும், ‘அந்தணர்’ என்றும் ‘பிராமணர்’ என்றும் அழைக்கப்படுபவர் அறவுணர்வு உடைய மேலோரேயன்றிக் குறிப்பிட்ட எச்சாதியாரும் ஆகார் என்னும் அயோத்திதாசரின் கூற்று மனங்கொளத்தக்கது.

திருக்குறளின் ஐம்பத்தைந்து அதிகாரங்களுக்கு மட்டுமே உரையெழுதியுள்ள அயோத்திதாசர் திருவள்ளுவரைப் புத்த சமயத்தைச் சார்ந்தவராகவே கொண்டு நூல்போதிப்பது புத்த சமய அறக் கோட்பாடுகளே என்பதை உரைமுழுவதும் அடிக்கோடிட்டுக் காட்டுவார். எப்பாடலுக்கும் ஏற்கனவே உள்ள உரை எதனையும் அப்படியே ஏற்றுக் கொள்ளாமல் தம் சொந்த உரையை முன்னிறுத்துவார். அறத்துப்பால் உரை முடிவில் அவர் கூறும் கருத்து உள்ளத்தைத் தொடுவதாகும்.

இவ்வறத்துப்பாலுள் மெய்யறம், மெய்ப்பொருள், மெய்யின்பமாகிய மூன்று புதைபொருளும் அடங்கியுள்ளதால் இல்லறத்தோர் முதல் துறவிகள் ஈறாகவுள்ள சகல மக்களும் தங்கள் தங்களுக்கு உண்டாம் துக்கங்கள் அற்று சுகப்பேற்றை அடைய இஃது போதிய போதமாகும். ஆதலின் ஒவ்வோர் விசாரணைப் புருஷரும் இதில் அடங்கியுள்ள ஆதி புத்தராம் கடவுள் வாழ்த்து முதல் மெய்யுணர்வு வரையில் தேறவாசித்து உணர்வரேல் பொய்யான வேதாந்த மாய்கையை விட்டுத்தெளிந்து மெய்யாய வேத அந்தத்தில் நிலைத்து பிறப்புப்பிணி மூப்புச்சாக்காடெனும் நான்கு வகை துக்கங்களையும் ஒழித்து உண்மையில் லயித்து என்றும் அழியா நித்தியானந்த சுகத்தை அடைவார்கள் என்பது சத்தியம் சத்தியமேயாம் (அலாய்சியஸ் II 728).

திருக்குறள் சைவசமயத்தது, வைணவ சமயத்தது, கிறித்துவசமய அடிப்படை கொண்டது என்றெல்லாம் கொண்டு விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. அது எச்சமயத்தார்க்கும் பொதுவானது என்ற கருத்தே ஏற்றுக்கொள்ளக்கூடிய தாயினும் திருவள்ளுவர் ஏதேனும் ஒரு சமயத்தைச் சார்ந்தவர் என்று முடிவு கட்டவேண்டிய நெருக்கடியான நிலையேற்பட்டால் அது தாசர் கூறும் புத்த சமண சமயமே என்பதற்கு மறுப்பிருக்க வழியில்லை. அவர் சில