பக்கம்:ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம்-அயோத்திதாசரின் சொல்லாடல்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ப. மருதநாயகம் ✤ 125


அவாவின் பெருக்கமே துக்கத்திற்கு மூலமென்னும் புத்தபிரானின் அறிவுரையை விதந்து கூறவும் தாசர் சிந்தாமணிப் பாடலையே தருவார்.

வேட்டன பெறாமை துன்பம் விழைநரைப் பிரிதல் துன்பம்

மோட்டெழில் இளமை நீங்க மூப்பு வந்தடைதல் துன்பம்

மேட்டெழுத்தறிதலின்றி யெள்ளற் பாடுள்ளிட்டெல்லாம்

சூட்டணிந் திலங்கும் வேலோய் துன்பமே மாந்தர்க் கென்றான்

(அலாய்சியஸ் II 395)

புத்த சமயக் கோட்பாடுகளை விளக்குதற்கும் புத்தர் வரலாற்றைக் கூறுதற்கும் தாசருக்குச் சீவக சிந்தாமணி கைகொடுத்துதவுவதைப் பார்க்கும்போது அவர் தமிழிலுள்ள சமண இலக்கியங்கள் கூறுவனவும் பெளத்தமே என்றுரைப்பது மெய்யென்றே முடிவு கட்ட நேரும்.

சிவவாக்கியம் புத்த மதத்தைச் சார்ந்த நூலென்றே கூறுவார் தாசர். இதற்கு “அண்டர் கோன் இருப்பிடம் அறிந்து கொண்ட ஞானிகள் கண்ட கோவில் தெய்வமென்று கையெடுப்பதில்லையே” என்னும் பாடலே போதுமான சாட்சியென்பார். அண்டர் கோன் என்பது புத்தருக்குரிய ஆயிர நாமங்களில் ஒன்றென்பதைச் சூளாமணி என்னும் நூலில் கூறியிருக்கும் புத்தர் தியானத்திலிருந்து தெரிந்து கொள்ளலாம் என்பது அவர் கருத்து.

தண்டா அமரை மலரின் மேல் நடந்தாயென்றும்

தமணீயப் பொன் அணையின் மேல் அமர்ந்தா யென்றும்

வண்டார சோகி நிழல் வாய் அமர்ந்தாயென்றும்

வாழ்த்தினால் வாராயோ வானவர் தம் கோவே

(அலாய்சியஸ் II 21)

தம் கருத்துக்களை வலியுறுத்த வேறிடங்களிலும் சிவவாக்கியத்தைத் தாசர் பயன்படுத்திக் கொள்வார். “வேஷ பிராமணர்கள் தங்களை உயர்ந்த சாதியென்றும் திராவிட பெளத்தர்களைத் தாழ்ந்த சாதியென்றும் வகுத்து வழங்கி வந்த காலத்தும் மேன்மக்கள் மிலேச்சர்களைக் கண்டித் தெழுதினார்கள்” என்பதற்குச்

“சாதியாவதேதடா சலந்திரண்ட நீரலோ”

“பறைச்சியாவதேதடா பணத்தியாவதேதடா”

(அலாய்சியஸ் I 130)

என்று தொடங்கும் பாடல்களையும், பூணு நூலுக்கு ஆதாரமாகும் குண்டலி என்றும் பிரம்மரத்தினம் என்றும் வழங்கும் நாடியின் மகத்துவ்த்தை வலியுறுத்த,