பக்கம்:ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம்-அயோத்திதாசரின் சொல்லாடல்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ப. மருதநாயகம் ✤ 127


ஆத்திசூடியை ஆத்திச்சுவடி யென்றும் கொன்றை வேந்தனைக் குன்றைவேந்தன் என்றும் வெற்றிவேற்கையை வெற்றி ஞானம் என்றும் அழைத்து அவற்றின் காப்புச் செய்யுள்களிலிருந்து இறுதிப் பாடல்கள் வரை அவை புத்தரையும் புத்த நெறியையும் போற்றுகின்றன வென்பதை வலியுறுத்தும் வகையில் உரை வரைவார். ஆத்திச்சுவடியின் காப்புச் செய்யுளிலுள்ள “ஆத்திச் சுவட்டில் அமர்ந்த தேவனை” எனும் தொடர் கல்லாத்தி மர நிழலில் வீற்றிருந்த ஆதி தேவனாம் புத்தபிரானைக் குறிக்கும் என்றும் அருங்கலைச் செப்பிலுள்ள,

ஆத்தியடி அமர்ந்து ஆகமங்கள் ஆய்ந்து

சாத்தன் நமக்கு அளித்த சீர்

என்ற பாடலையும் பின்கலை நிகண்டிலுள்ள,

தருமராசன் முனீந்திரன் சினன் பஞ்ச தாரை விட்டே

அருள் கறந்த உணர்கூட்டும் ததாகதன் ஆதிதேவன்

விரவு சாக்கையனே சைனன் விநாயகன் சினம் தவிர்ந்தோன்

அரசு நீழலில் இருந்தோன் அறி அறன் பகவன் செல்வன்

என்ற பாடலையும் சான்றுகளாகத் தருவார்.

கொன்றை வேந்தனின் காப்புச் செய்யுளாக

குன்றை வேந்தன் செல்வன் அடியினை

என்றும் ஏற்றித் தொழுவோம் யாமே

எனும் அடிகளைத் தந்து,

“குன்றைவேந்தன்” எனும் தொடரும் “செல்வன்” எனும் சொல்லும் புத்தனையே குறிக்கும் என்றும் “சிறந்திடும் குன்றைவேந்தன் குணபத்திரன்” என்று பின்கலை நிகண்டும் “சக்கரப் பெருஞ்செல்வன்” என்று சூளாமணியும் “சினவுணர்கடந்த செல்வன்” என்று சீவகசிந்தாமணியும் குறிப்பிடுவதைச் சான்றுகளாகவும் எடுத்துரைப்பார்.

வெற்றி வேற்கையின் காப்புச் செய்யுளாக,

வெற்றி ஞான வீரன் வாய்மை

முற்றும் அறிந்தோர் மூதறிவோரே

என்னும் அடிகளைத் தந்து “வெற்றி வீரனாகிய புத்தனின் மெய் வாக்கியங்கள் நான்கையும் முழுவதும் தெரிந்து கொண்டவர்கள் முற்றும் உணர்ந்த பேரறிவாளராகும்” என்று பொருள் உரைப்பார்.