பக்கம்:ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம்-அயோத்திதாசரின் சொல்லாடல்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

128 ✤ ஒரு பூர்வ பெளத்தனின் சாட்சியம்


ஆத்திசூடியின் “அறம் செய விரும்பு” எனும் முதற் செய்யுள் “அறன் செயல் விரும்பு” என்று மாற்றப்பட்டு அறக்கடவுளாகும் புத்தபிரான் செய்கைகளாம் நற்சாட்சி, நற்சிந்தை, நல்வசனம், நற்செய்கை, நல்வாழ்க்கை, நல்லூக்கம், நற்கருத்து, நல்லமைதி எனும் இவைகளை விரும்ப வேண்டும் என்று பொருள் உரைக்கப் பெறும். அறன் என்னும் வல்லின றகரம் அமைந்த தெய்வப் பெயர் உண்டோ வென்பார்க்கு அயோத்திதாசர்,

கொடு வெஞ்சிலை வாய்க் கணையில் கொடிதாய் நடு நாளிரவின் னவைதான் திருமால் நெடு வெண்ணிலவின் நிமிர்தேர் பரியா தடு மாரெழினின்றறனே யருளே

எனும் சீவக சிந்தாமணிப் பாடலை மேற்கோள் காட்டுவார்.

புத்த நெறி கொண்டு பொருள் தரும் அயோத்திதாசர் ஆங்காங்கே தமது பாலிமொழி யறிவையும் பயன்படுத்திக் கொள்கிறார்.“சனிநீராடு” எனும் வரிக்கு உலோக ஊற்றுகளில் உடல் முழுவதும் அழுந்தக் குளித்தெழு என்று பொருள் உரைத்துச் சனி நீரென்பது பாலிமொழியில் உலோக ஊற்றைக் குறிக்குமென்றும் அதற்கு எண்ணெய் தேய்த்துக் குளித்தல் என்னும் பொருள் பொருந்தாதென்றும் வாதிடுவார்.

எள் நெய் கண்டு பிடித்த காலம் ஆயிர வருஷங்களுக்குப் பிந்தியும் கானிஷ்காவரசனுக்கு முந்தியது மாகும். இந்திய மாதா என்னும் அம்பிகையம்மன் வாசக நூல் இயற்றிய காலம் ஆயிரத்தி ஐந்நூறு வருஷங்களுக்கு மேற்பட்டதாகும். ஆதலின் எள் நெய் தேய்த்து முழுகென்பது வாசக நூலின் காலவரைக்குப் பொருந்தாது. இன்னும் சகலதேச மக்களுக்கும் எண்ணெய் ஸ்நானம் பொருந்தாதென்பதும் திண்ணம் (அயோத்திதாசர் II 25.6).

“அரனை மறவேல்” என்பதை “அறனை மறவேல்” என்று பாடம் கொண்டு அறவாழிக் கடவுளாம் புத்தபிரானை என்றும் மறவாதே என்று பொருள் உரைப்பார். புத்தர் வாழ்ந்த காலத்தில் தன்னைத் தொழ வேண்டுமென்றோ, தன்னை மறக்கக் கூடாதென்றோ அவர் சொல்லவில்லையாயினும் ஒளவையார் இவ்வாறு கூறுதற்குக் காரணம் புத்தனை எண்ணும்போது புத்தன் மொழிந்த பொருளை முற்றும் சிந்திக்க ஏது உண்டாகும் என்பதே எனும் விளக்கமும் தரப்படும்.

“அனந்தல் ஆடேல்” என்னும் வரிக்கு “அதி நித்திரை செய்யாதே” எனும் பொருள் தவறானதென்றும் “அதிக வெள்ளப்