பக்கம்:ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம்-அயோத்திதாசரின் சொல்லாடல்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ப. மருதநாயகம் ✤ 129


பெருக்கத்தில் நீந்தி விளையாடாதே” என்பதே சரியான பொருளென்றும் பாலிமொழியில் அனந்தல் என்னும் சொல்லுக்கு வெள்ளம், பேரலை, நீர்வேகம் எனும் பொருள் உண்டென்றும் கூறி,

திரிபிடகம், திரிக்குறள், திரிமந்திரம், திரிகடுகம், திரிவாசகம் முதலிய நூற்கள் யாவற்றிலும் பாலி மொழிகளே மிக்க மலிவுள்ளது கொண்டு அனந்தல் என்னும் மொழிக்கு வெள்ளம் என்னும் பொருளை விவரித்துள்ளோம்.

என்று குறிப்பிடுவது பழந்தமிழ் இலக்கியங்களில் பாலி மொழிச் சொற்களின் பயன்பாடு பற்றிய ஆய்வைத் தூண்டுவதாகும்.

“சக்கர நெறி நில்” எனும் அடிக்கு அறவாழியாம் தருமச் சக்கர ஒழுக்கத்தில் நிலைத்திரு என்று பொருள் கூறிச் சக்கர நெறி பற்றி அவர் தரும் விளக்கம் கருதற்குரியது.

திரிபேத மென்றும் திரிபீடமென்றும் வழங்கிய சுருதி மொழிகளைக் கலை நூற்களில் வகுத்து நூல் நெறி யென்றும் செய்யுட்களில் வகுத்துப் பாநெறி யென்றும் அரசர்கள் செவ்வியக்கோல் வழியில் வகுத்துக் கோனெறியென்றும் பொதுவாய் நீதிநெறியில் வகுத்து நீள்நெறி யென்றும் போதித்துள்ளவற்றில் உலகெங்கும் சூழ்ந்துள்ள சருவ சீவர்கள் மீதும் கருணை வைத்துக் காக்கும் நெறியே விசேஷ நெறியாதலின் நமது ஞானத்தாய் சக்கர நெறி நில்லென வற்புறுத்திக் கூறியுள்ளாள் (அயோத்திதாசர் II 41-42).

“சையெனத் திரியேல்” எனும் அடிக்கு “ஞானியென்று உன்னை மெச்சும்படியான வேஷம் பூண்டு நீ உலாவாதே” என்று பொருள் கூறிப் பாலிமொழியில் ஸை என்னும் சொல்லுக்கு ஞானமென்றும் ஸைலம் என்னும் சொல்லுக்கு ஞானக்குன்று என்றும் ஸைவம் என்னும் சொல்லுக்குத் தன்னை அறிதல் என்றும் ஸையோகம் என்னும் சொல்லுக்கு ஞான பாக்கியம் என்றும் பொருள் இருப்பதை எடுத்துரைப்பார்.

“திருமாலுக்கு அடிமை செய்” என்னும் அடியில் “திருமால்” மனுமக்களுள் சிறந்த புத்தபிரான் என்று பொருள் தரும் எனக் குறித்துத் தம் கருத்தை வலியுறுத்த அவர் தரும் விளக்கம் நீண்டது.

தன்மசக்கரப் பிரவர்த்தனன் என்ன உலகெங்கும் வட்டமிட்டு அறவாழியை உருட்டியது கொண்டு மாலென்னும் பெயர் பெற்ற புத்தபிரானின் பாததுரளி யென்றெண்ணிச் சங்கத்தோர்களையே சங்கரன் எனப் பாவித்துச் சங்க தருமத்தையே சிந்தித்துப் பற்றறுக்க வேண்டும் என்னும் கருத்தால் பற்றற்றானுக்கு அடிமையாக வேண்டுமென்பது கருத்து (அயோத்திதாசர் II 50).