பக்கம்:ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம்-அயோத்திதாசரின் சொல்லாடல்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

132 ✤ ஒரு பூர்வ பெளத்தனின் சாட்சியம்


இறைவனாகும்” எனும் முதற் பாடலில் இறைவன் என்று போற்றப்படுபவன் புத்தனேயென்றும் அவனே வரிவடிவாம் அட்சரங்களை ஓதுவித்தவன் என்றும் அவன் காலத்தில் பாலி மொழி வரிவடிவாம் எழுத்துகளின்றி இருந்ததென்றும் அவனே “சகட பாஷையாம் சமஸ்கிருத அட்சரங்களையும் திராவிடபாஷையாம் தமிழ் அட்சரங்களையும் இயற்றி வரிவடிவாய்க் கற்களில் வரைந்து கல்வியைக் கற்பித்துக்கொண்டு எழுத்தறிவித்தவன்” என்றும் வாதிடுவார்.

வேதம் என்பது புத்தன் மொழிந்தது, வேதியர் என்பார் புத்த சமயத் துறவியரே என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்தும் தாசர் “வேதியர்க்கழகு ஓதலும் ஒழுக்கமும்” எனும் பாடலுக்கு,

சத்திய தன்மமாம் சதுர்வேத மொழிகளை ஓதுவோர்க்கழகு யாதெனில் எத்தேச எப்பாஷைக் காரனாயிருப்பினும் நீதியும் நெறியும் வாய்மையும் நிறைந்து சகலருக்கும் நன்மை விளக்க வேண்டியவனாகவும் அன்றேல் ஓதியுணர்ந்த பயனால் சகலருக்கும் நல்லவனாகவும் விளங்குவோன் எவனோ அவனே வேதம் ஓதும் சிறப்புடையான் என்பது கருத்து (அயோத்திதாசர் II 128).

என்று விளக்கம் தருவார்.

சாதிப் பாகுபாட்டைச் சாடும் தாசர்,

நாற்பாற் குலத்தின் மேற்பால் ஒருவன்

கற்றிலன் ஆயின் கீழிருப்பவனே

என்னும் வரிகளுக்கு,

அந்தணன், அரசன், வணிகன், வேளாளன் எனும் நான்கு வகைத் தொழில் நடத்தும் நான்கு குடும்பத்தோருள் விவேகம் மிகுந்த மேற்குடும்பமாம் அந்தணர் குடும்பத்தில் பிறந்தும் கலை நூற்களை வாசித்து உணராதவனாய் இருப்பின் அவனைக் கீழ்க் குடும்பமாம் கடைக்குலத்தான் என்றே அழைக்கப்படுவான்.

என்றும்,

எக்குடிப்பிறப் பினும் யாவரேயா யினும்

அக்குடியில் கற்றோர் அறவோராவர்

என்னும் வரிகளுக்கு,

மேற் கூறியுள்ள நால்வகைத் தொழிலை நடத்தும் நாற்குடும்பத்தோருள் எக்குடும்பத்திலாயினும் எவன் ஒருவன் கலை நூற்களைக் கற்றுப் பூரணம் அடைகின்றானோ அவனே அறிவோனாம் அந்தணன் என்றழைக்கப்படுவான் (தாசர் II 134)

என்றும் பொருள் கூறுவார்.