பக்கம்:ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம்-அயோத்திதாசரின் சொல்லாடல்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ப. மருதநாயகம் ✤ 137


வேத நெறியாளர்கள் என்றும் பிராமணர்கள் என்றும் அந்தணர்கள் என்றும் தம்மை அழைத்துக் கொண்டவர்கள் சமண, பெளத்த நூல்களில் பெரும்பாலானவற்றை அழித்ததோடல்லாமல் தொல்காப்பியம், புறநானூறு, திருமந்திரம், சிலப்பதிகாரம் போன்ற பழந்தமிழ் நூல்களிலெல்லாம் இடைச்செருகலையும் பாட வேறுபாடுகளையும் புகுத்தி அவற்றின் உயிர் நாடியான கருத்துக்களைச் சிதைத்தார்கள். அவர்களுக்குப் பாடம் புகட்டும் வண்ணம் திருக்குறள், சீவகசிந்தாமணி, அறநெறிச்சாரம் போன்ற அறநூல்கள், ஒளவையின் பாடல்கள் ஆகியவற்றையெல்லாம் மறு ஆய்வு செய்து அவற்றின் பொருளைப் புத்தநெறிக்கேற்ப விளக்குவதோடு சிவவாக்கியர், இடைக்காடர் போன்ற சித்தர்களையும் தாயுமானவர் போன்ற அனுபூதிமான்களையும் மீள் பார்வைகளின் மூலம் பெளத்த சமயச் சார்புடையவர்களாகவே காட்டுகிறார். பகைவர்களைப் பழிவாங்க வன்முறைகளில் தாமும் ஈடுபடாது பிறரையும் தூண்டாது அவர்களுக்கு இரக்கம் காட்டி அன்பு வழியில் திருத்த முயல வேண்டும் என்பது அவர் நம்பிக் கடைப்பிடித்த கொள்கை. அதற்கேற்பவே பழந்தமிழ் இலக்கியங்களை இத்தகைய மறுவாசிப்புக்கு உட்படுத்துகிறார் தாசர் என்பது பெரும் பாராட்டுக்குரியதாகும்.