பக்கம்:ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம்-அயோத்திதாசரின் சொல்லாடல்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ப. மருதநாயகம் ✤ 141


காண்டம் 24: லிச்சவிகளுக்கு அருள் புரிதல்

காண்டம் 25: நிர்வாண நிலை நோக்கிப் பயணம்

காண்டம் 26: மகாபரி நிர்வாணம்

காண்டம் 27: நிர்வாண நிலையின் பெருமை

காண்டம் 28: நினைவுச் சின்னங்களின் பங்கீடு

புத்த சரிதத்தின் இறுதியில் அசுவகோசர் தமது கல்வியறிவைக் காட்டிக் கொள்வதற்காகவோ, காவியம் பாடும் ஆற்றலை வெளிப்படுத்தவோ புத்தர் வரலாற்றை எழுதவில்லையென்றும் பொதுமக்களின் நன்மையும் இன்பமும் கருதியே அச்செயலைச் செய்ய முன்வந்ததாகவும் சொல்வார். பெளத்த சமயக் கோட்பாடுகளில் தம்மை வல்லுநராகக் காட்டும் முயற்சியை மேற்கொள்ளாமல் அவற்றை யாவரும் புரிந்து கொள்ளும் வண்ணம் எளிய நடையில் தரும் பணியையே செய்துள்ளார். சொந்தக் கருத்துகளை வலியுறுத்துவது அவர் நோக்கமன்று. அவர் காலத்தில் அச்சமயம் எவ்வாறு ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்ததோ அவ்வாறு விளக்கமாக, முழுமையாகத் தர முயல்கிறார். புத்தர் வாழ்ந்த காலத்திற்குக் குறைந்தது ஐந்தாறு நூற்றாண்டுகள் பின் வாழ்ந்து புத்தரின் உண்மையான வரலாற்றை அறிந்து சொல்வார் என்று எதிர்பார்க்க முடியாது. காவியநடை கருதி சில கற்பனைக் காட்சிகளைச் சேர்க்கிறார் என்பது தெளிவு. பாத்திரங்களின் உரையாடல்களும் உண்மை வரலாற்றைப் பிரதிபலிப்பவையாக இல்லை. புத்தருடைய அறிவுரைகள் வருமிடங்களில் எல்லாம் பாலிமொழியிலுள்ள புத்தருடைய போதனைகளில் பல எடுத்துக் கொள்ளப்படுகின்றன. அவற்றில் மீண்டும் மீண்டும் வரும் ஏராளமான உவமைகள் கவிஞரால் சேர்க்கப்பட்டவையே. அவருக்குமுன் புத்தரைப்பற்றி எழுதப் பெற்ற நூல்களிலிருந்து சிலவற்றைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு அவற்றையொட்டித் தம் காவியத்தை அசுவகோசர் எழுதியுள்ளார் என்பதே உண்மை. சீனயாத்திரிகரான ஹியன் சாங் (Hiuan Tsang) அசுவகோசரின் நூல்களை உயர்வானவையாக மதிப்பிடவில்லை. பாடலிபுரத்தில் சில தீய ஆவிகளோடு அசுவகோசர் போரிட்டதை அவர் மட்டுமே குறிப்பிடுகிறார். எனினும் அசுவகோசர் கவிஞராகவும் புத்த சமயக் கொள்கைகளைத் தெளிவாகத் தந்தவராகவும் இந்திய மக்களின் நினைவில் இடம்பெற்றுள்ளார்.

அசுவகோசரின் புத்தசரிதத்தில் மகாபாரத, இராமாயணக் கதைகள் பெரிதும் சுட்டப்பெறுகின்றன. இவை புத்தரும் புத்தசமயமும் புறக்கணித்த நம்பிக்கைகளை உட்கொண்டவை.