பக்கம்:ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம்-அயோத்திதாசரின் சொல்லாடல்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

142 ✤ ஒரு பூர்வ பெளத்தனின் சாட்சியம்


சித்தார்த்தனின் பிறப்பைப் பற்றிச் சொல்லும்போது, அவன் “அவுர்வா தொடையிலிருந்தும், பிருது கையிலிருந்தும், மாந்தாத்ரு தலையிலிருந்தும், கக்சிவத் அக்குளிலிருந்தும் பிறந்ததுபோல்” அரசியின் விலாப்பகுதியிலிருந்து வலியின்றிப் பிறந்தான் என்று முதற்காண்டம் கூறும் (சரிதம் 3).

புத்தரைத் தங்கள் வலையில் வீழ்த்துமாறு ஏவப்பட்ட பெண்களுக்கு, ஒரு புரோகிதனின் மகன் பெண்ணின்பம் எவ்வாறு பல பெரிய முனிவர்களைக் கவிழ்த்துள்ளது என்பதற்குச் சான்றுகள் தருகின்றான். வியாசர் காசிசுந்தரியெனும் பரத்தையால் காலால் உதைக்கப்பட்டார்; மந்தால கெளதமர் ஒரு பரத்தையை மகிழ்விக்க வேண்டிப் பிணங்களைச் சுமந்தார். தீர்க்கதபாசு கெளதமர் முதிய வயதில் கீழ்ச்சாதியைச் சேர்ந்த இளம்பெண்ணால் இன்பம் பெற்றார். பெண்ணினம் பற்றி ஏதும் அறியாத ரிஷ்யசிருங்கர் சாந்தா என்பவளால் ஏமாற்றப்பட்டார்; அருந்தவம் செய்த விசுவாமித்திரரை அப்சரசான கிருதாசி மயக்குவதில் வெற்றி பெற்றாள் (சரிதம் 47).

இத்தகைய கதைகளெல்லாம் புத்தர் காலத்திற்குப் பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு “வேஷ பிராமணர்களால்” எழுதப் பெற்றவையென்பது அயோத்திதாசரின் முடிவாகும்.

ஒழுக்கத்திற்குத் தலையாய இடம் தரவேண்டுமென்று அறிவுறுத்திய புத்தரின் வரலாற்றில் பல ஆபாசக் கதைகளும் நுழைக்கப்பட்டிருக்கின்றன. முறையற்ற வகையிலும் பெண்ணின்பம் பெறுவதில் தவறில்லையென்று சித்தார்த்தருக்கு அறிவுரை கூறும் உதாயின்,

காமமே தலையாய நன்மையென்று அறிந்த புரந்தரன் கெளதமரின் மனைவியாகிய அகலிகையைக் காதலித்தான்; சோமனின் மனைவியாகிய ரோகினியைக் கேட்ட அகத்தியன் அவளைப் போன்றிருந்த லோப முத்திரையைப் பெற்றான்.

நோன்புகள் பல நோற்ற பிருகஸ்பதி உததியாவின் மனைவியாகிய மமதாவின் வழி பரத்வாஜரைப் பெற்றான்.

சந்திரன் பிருகஸ்பதியின் மனைவி பூசை செய்து கொண்டிருந்த பொழுது அவளைச் சேர்ந்து புதனைப் பெற்றான்.

பராசரன், ஒரு மீனின் மகளாகிய காளியை யமுனை நதிக்கரையில் புணர்ந்தான்.

வசிஷ்டன் அக்சமாலா எனும் இழிகுலத்துப் பெண்ணோடு கூடி, ஒரு மகனைப் பெற்றான் (சரிதம் 55-56).